சேலம் தற்போதைய மக்களவை உறுப்பினருக்கு சீட் மறுத்த திமுக! காரணம் என்ன?
சேலம் எம்பி பார்த்திபன்
மக்களவை தேர்தலில், திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று சென்னையில் வெளியிட்டார். அதில், சேலம் நாடாளுமன்ற சிட்டிங் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்ட சில சிட்டிங் எம்.பி-களுக்கு மீண்டும் சீட் தர திமுக தலைமை மறுத்து புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஆர்.பார்த்திபன் பொதுமக்கள் மத்தியில் செய்த பணிகளைச் சீர் தூக்கிப் பார்த்த திமுக தலைமை இந்த முடிவுக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, திமுக தலைமை செய்த ரகசிய சர்வே மூலம் கிடைத்த தகவல்கள் திமுக தலைமைக்குப் புள்ளி விவரங்கள் மாறாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எஸ்.ஆர்.பார்த்திபன் மீது பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்லாது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவி வருவதும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், 5 ஆண்டுகளில் அவர் தனது தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களிடம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெற்று அதற்கான தீர்வை கண்டுள்ளார். வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், எஸ்.ஆர்.பார்த்திபன் சென்னையில் முகாமிட்டு முதலமைச்சரின் உறவினர்களைக் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக அடிக்கடி சந்தித்து மீண்டும் சேலம் எம்.பி சீட்டு தர வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் திமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருந்த போதிலும், திமுக தலைமை கறாராக சேலம் திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் டி.எம்.செல்வகணபதிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில், சேலம் தொகுதி சிட்டிங் எம்.பி., எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக மூலம் அரசியலில் அறியப்பட்ட செல்வகணபதி 1991ம் ஆண்டு முதல் 96 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தவர். 1999ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2008ம் ஆண்டு திமுகவில் செல்வ கணபதி இணைந்தார். அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, சுடுகாட்டுக்கு கூரை அமைப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறி இவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டதால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் இழந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் இவரை இவ்வழக்கிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது.பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது இவருக்கு மீண்டும் இந்த தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு திமுக சார்பில் கிடைத்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu