‘தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் தப்ப முடியாது’ -மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி

‘தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் தப்ப முடியாது’ -மதுரை மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி
X

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் தொண்டர்களை பார்த்து கையசைத்தார் எடப்பாடி பழனிசாமி.

‘தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் தப்ப முடியாது’ -என மதுரை அதிமுக மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்து பேசினார்.

தி.மு.க. ஊழல் அமைச்சர்கள் தப்ப முடியாது என்று மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

மதுரை அ.தி.மு.க. மாநாடு

மதுரை ரிங் ரோடு வளையங்குளத்தில் ‘வீர வரலாற்றின் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரில் அ.தி.மு.க. மாநாடு இன்று காலை துவங்கி இரவு வரை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க .பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் இந்த மாநாட்டை மிகவும் பிரமாண்டமாக நடத்த அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

தொண்டர்கள் குவிந்தனர்

அதன்படி மாநாட்டிற்காக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாடு இன்று. தான் தொடங்கியது என்றாலும் நேற்று மாலையில் இருந்தே மதுரை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் வாகனங்களில் வந்து குவிய தொடங்கினர். இதனால் நேற்று மாலையே அ.தி.மு.க. மாநாடு தொடங்கியது போல் காணப்பட்டது.

கொடி ஏற்றிய எடப்பாடி

எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகள் அ.தி.மு.க. தொண்டர்களின் தலைகளாக காட்சியளித்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் மாநாட்டு திடலின் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். கருப்பு வெள்ளை, சிகப்பு நிற வண்ண பலூன்களை பறக்கவிட்டார். இதற்காக பிறந்த வேனில் வந்தார். அப்போது தொண்டர்கள் அவரை சூழ்ந்து காணப்பட்டனர். எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்றியபோது வானில் ஹெலிகாப்டபர் மலர்களை தூவியது. அதன் பின்னர் மாநாட்டு பந்தலை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து கவியரங்கம் பட்டிமன்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. மாலையில் அ.தி.மு.க. மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை கழக நிர்வாகிகள் பேசினார்கள். இறுதியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர் பேசியதாவது:-

அழிக்க முடியாது

மதுரை மண்ணில் எதை தொடங்கினாலும் வெற்றி தான்.தொடங்கிய ஆறே மாதத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்றால் அது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. தான்.

2011-2021 வரையிலான 10 ஆண்டுகால ஆட்சியைப் பொற்காலம் என மக்கள் கொண்டாடினர்.காவிரி நீர் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்ற அரசாங்கம் அதிமுக அரசு

எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனது தலைமையிலான நான்கரை ஆண்டு கால ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்தோம்; ஏராளமான கலை, அறிவியல், சட்டக் கல்லூரிகளை திறந்தோம்.


திமுக அரசு நீட் விவகாரத்தில் நாடகம் போடுகிறது, 2 ஆண்டில் நீட் விலக்கு பெற என்ன செய்தீர்கள் என கேட்க விரும்புகிறேன்.

டாஸ்மாக் ஊழல்

டாஸ்மாக்கில் ஏழை எளியோர் மதுவாங்கினால் ரூ.10 அதிகம் கேட்கிறார்கள். தினமும் ரூ.10 கோடி லாபம், முறைகேடான பார் மூலம் கிடைக்கும் வருவாய் முதல்வர் ஸ்டாலினுக்கு போகிறது.

ஊழல் வழக்கில் சிக்கிய ஒரு அமைச்சர் கம்பி எண்ணுகிறார். மற்ற தி.மு.க. ஊழல் அமைச்சர்களும் தப்ப முடியாது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம். அ.தி.மு.க.வினருக்கு எதிரான வழக்கை சட்டப்போராட்டம் நடத்தி வெல்வோம்.


தி.மு.க. மூலதனம் பொய்

தி.மு.க.வின் மூலதனமே பொய் தான். கட்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது ஸ்டாலினின் தந்தை கருணாநிதி தான். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலின் ஆட்சி போய்விடும் என் பயத்தில் கட்சத்தீவை மீட்போம் என்கிறார்.

15 லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாடு சரித்திர சாதனை படைத்துள்ளது. இதுவரை எந்த மாநாட்டுக்கும் இவ்வளவு பேர் வந்தது கிடையாது. அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு சரித்திர சாதனை படைத்து இருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!