தமிழகத்தில் சிதறாத தி.மு.க. கூட்டணி: சிதறும் எதிர்க்கட்சி வாக்குகள்

தமிழகத்தில் சிதறாத தி.மு.க. கூட்டணி: சிதறும் எதிர்க்கட்சி வாக்குகள்

திமுக கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் (கோப்பு படம்).

தமிழகத்தில் சிதறாத அணியாக தி.மு.க. கூட்டணி உள்ளது. 4 அணிகளால் எதிர்க்கட்சி வாக்குகள் சிதறும் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே தொடர்வதால் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் தீவிரமான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த முறை4 முனை போட்டி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. சார்பாக நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்தது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்தனர். லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்று அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை. இது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த முறை பெரும்பாலும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் 40 தொகுதிகளிலும் போட்டியிடும், புதிய பாரதம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.

இது போக மூன்றாவதாக நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடும். எப்போதும் போல 40 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். இந்த நிலையில்தான் பாஜக இன்னொரு அணியை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + பாமக + தேமுதிக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அணியை பொறுத்தவரை பழைய கூட்டணியில் அப்படியே போட்டியிட உள்ளது. லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. பிப்ரவரி 3,4ஆம் தேதிகளில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அதன்படி இந்த முறையும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக , விடுதலை சிறுத்தைகள், இன்னும் சில உதிரி கட்சிகள் உடன் திமுக கூட்டணி வைக்க உள்ளது. இந்த தேர்தல் இதனால் திமுகவிற்கு சாதகமாக மாறுமோ என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது.ஏனென்றால் எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. அதிமுக தனியாக நிற்க போகிறது. பாஜக கூட்டணி தனியாக அமைக்க போகிறது. இது போக நாம் தமிழரும் எதிர்க்கட்சி வாக்குகளை பிரிக்கும். இப்படி எதிர்க்கட்சி வாக்குகள் 3ஆக பிரியும் என்பதால் திமுகவிற்கு அது சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். எதிர்க்ககட்சிகள் வாக்குகள் பிரிவது.. எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும்.. எந்த தேர்தலாக இருந்தாலும் .. அவர்களின் வெற்றிக்கே உதவும்.

2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி வாக்குகளை பிரித்தது எப்படி திமுகவிற்கு எதிராக மாறியதோ அதேபோல்தான் அதிமுகவிற்கு இந்த முறை பாஜகவின் மூன்றாவது கூட்டணி எதிராக மாறும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக தென் மண்டலத்தில் ஓபிஎஸ், டிடிவிதினகரன் ஆகியோர் அதிமுக வாக்குகளை பிரிப்பது திமுகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

இதன்படி பார்த்தால் சிதறாத தி.மு.க. கூட்டணியால் அது தி.மு.க. அணிக்கு வாக்குகளை அள்ளிக்கொடுக்கும். மாறாக எதிர்க்கட்சிகள் மூன்று அணிகளாக பிரிந்து நிற்பதால் அவர்கள் தனித்தனியாக பிரிக்கும் வாக்குகள் தி.மு.க.வின் இமாலய வெற்றிக்கு வழி வகுத்து விடும் என்பதில் ஐயமில்லை.

Tags

Next Story