அமைச்சர் வேலு, பொன்முடி வாரிசுகளுக்கு சீட் வழங்காத தி.மு.க. தலைமை

அமைச்சர் வேலு, பொன்முடி வாரிசுகளுக்கு  சீட் வழங்காத தி.மு.க. தலைமை
X
அமைச்சர் வேலு, பொன்முடி வாரிசுகளுக்கு தி.மு.க. தலைமை சீட் வழங்காததால் கட்சி தொண்டர்களிடையே அ திருப்தி ஏற்பட்டு உள்ளது.

தி.மு.க.வின் 3 முக்கிய தலைகள் தங்கள் வாரிசுகளுக்கு சீட் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு கைவிரித்துள்ளது திமுக தலைமை. குறிப்பாக, அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பனுக்கு சீட் மறுக்கப்பட்டது யாருமே எதிர்பார்க்காதது.

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

திமுகவில் சிட்டிங் எம்.பிக்கள் 10 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி- கனிமொழி, வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி, தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை- தயாநிதி மாறன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, காஞ்சீபுரம் (தனி) - ஜி.செல்வம், அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை, வேலூர்- கதிர் ஆனந்த், நீலகிரி (தனி) - ஆ.ராசா ஆகியோர் மீண்டும் களமிறங்குகின்றனர்.

11 பேர் புதுமுகங்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, தர்மபுரி தொகுதியில் ஆ மணி, ஆரணி தொகுதி- எம்எஸ் தரணி வேந்தன், கள்ளக்குறிச்சி தொகுதி- ஏ மலையரன், சேலம் தொகுதி- டிஎம் செல்வ கணபதி (முன்னாள் அமைச்சர்), ஈரோடு தொகுதி - கேஇ பிரகாஷ், கோவை - கணபதி ராஜ்குமார், தஞ்சாவூர் - ச.முரசொலி, தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார், பெரம்பலூர் - அருண் நேரு, தேனி - தங்க தமிழ்செல்வன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கியமான தலைகள் சிலரின் வாரிசுகளுக்கு சீட் வழங்கப்படவில்லை. அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன், தற்போது முழுநேர அரசியலுக்கு வந்துவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கலசப்பாக்கம் தொகுதியை தனது மகன் கம்பனுக்கு எதிர்பார்த்தார் வேலு. ஒரே தேர்தலில் தந்தையும், மகனும் போட்டியிட வேண்டாம் என கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிபோனது.

தற்போது திமுக மருத்துவர்கள் அணியில் மாநில பொறுப்பில் உள்ள கம்பன், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருகிறார். இதன் மூலம் கட்சிக்காரர்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை உயர்த்தி வருகிறார். வேலு மகன் கம்பன்: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோரிடத்தில் மிகுந்த நெருக்கம் இருப்பதால், எ.வ.வே.கம்பன் திருவண்ணாமலையில் போட்டியிட கட்சித் தலைமை கிரீன் சிக்னல் கொடுத்துவிடும் என அவரது ஆதரவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ள சி.என். அண்ணாதுரை, அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர ஆதரவாளர். கம்பனுக்கு சீட் என்றால் தொகுதியை விட்டுக்கொடுக்கவும் தயாராக இருப்பவர். எனினும், இந்த முறை கம்பனுக்கு சீட் கொடுக்காமல் மீண்டும் சி.என்.அண்ணாதுரையையே களமிறக்கியுள்ளார் ஸ்டாலின்.

கள்ளக்குறிச்சி தொகுதியின் தற்போதைய எம்.பியாக இருக்கிறார் கவுதமசிகாமணி. முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணிக்கு மீண்டும் கள்ளக்குறிச்சியில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளது திமுக தலைமை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்திற்குள் பொன்முடி குடும்பத்தினர் உள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு ஐகோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்ததால் எம்.எல்.ஏ பதவியையும், அமைச்சர் பதவியையும் இழந்தார் பொன்முடி. பொன்முடி மகன் கவுதமசிகாமணி: ஐகோர்ட் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி. ஆனால், அமைச்சரவையில் சேர்ப்பதற்கு ஆளுநர் ரவி மறுத்துவிட்டதால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. தற்போதைய சூழலில் பொன்முடிக்கு அமைச்சர் பதவி மீண்டும் கிடைப்பது சிக்கலாகவே இருக்கிறது. கவுதமசிகாமணியும் பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளார். எனினும், அவருக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு கள்ளக்குறிச்சியில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொன்முடி பல்வேறு வழக்குகள், பதவி இழப்பால் தவித்து வரும் நிலையில், அவரது மகனுக்கு சீட் வழங்கப்படாதது விழுப்புரம் மாவட்ட திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரக்கோணம்: கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி மகன் வினோத் காந்தி அரக்கோணம் தொகுதியைக் குறிவைத்து அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார். வினோத் காந்தி தி.மு.க சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளராக இருக்கிறார். இவருக்கு அரக்கோணம் தொகுதியில் எம்.பி சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அமைச்சர் காந்தி மகன்: ஜெகத்ரட்சகன் வேறு தொகுதிக்கு தாவ வாய்ப்புள்ளதாகவும், அரக்கோணம் சீட்டை வினோத் காந்தி பெற்று விடுவார் என்றும் திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. ஆனால், அரக்கோணம் தொகுதியில் மீண்டும் ஜெகத்ரட்சகன் நிறுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் காந்தியின் வாரிசுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. திமுகவில் முக்கிய நபர்களாக உள்ள எ.வ.வேலு, பொன்முடி, காந்தி ஆகியோரின் வாரிசுகளுக்கு இந்த லோக்சபா தேர்தலில் சீட் மறுக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே பெரும் விவாதமாகியுள்ளது. ஏற்கனவே சிட்டிங் எம்.பிக்களாக உள்ள வாரிசுகளான கலாநிதி வீராசாமி, கதிர் ஆனந்த் ஆகியோருக்கு மீண்டும் அதே சீட் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
Oppo Find X8 இணையத்தைக் கலக்கும் மொபைல் சீரிஸ்..! என்ன விலை? | oppo find x8 pro review in tamil