அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல், சிவில் வழக்கு தொடரப்படும் என திமுக மாநிலங்களவை எம்.பி ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும், இல்லை என்றால் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி எச்சரித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுக அரசையும் ,முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்து சமய அறநிலைத்துறை மீது அவர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் புகார்களை அவர் தெரிவித்துள்ளார் ஆனால் இதுவரை அவற்றிற்கான ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை. பலமுறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை எச்சரித்தும் அவரின் குற்றச்சாட்டுகள் தொடர்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு துபாய் தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள அவர் முதலீட்டாளர்களை சந்தித்து வருகிறார். முதல்வரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் தமிழர்களின் நிதியை பெருக்குவதற்காக அல்ல, தனது குடும்பத்தை பெருக்குவதற்காக, தனது குடும்ப நிதியை பெருக்குவதற்காக என்று விமர்சித்துள்ளார்.
ஊழல் செய்த பணத்தை துபாயில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும், அந்த பணத்தை முதலீடு என்ற பெயரில் இங்கு கொண்டு வந்து வெள்ளையாக்க முயற்சிகள் நடக்கிறது என்றும் அவர் தாறுமாறாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஆர்.எஸ் பாரதி, தமிழக வளர்ச்சிக்காக முதலமைச்சர் மேற்கொண்டுள்ள அரசு முறை துபாய் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறு கருத்து பரப்பியுள்ளார்.
தனது கருத்துக்கு அண்ணாமலை அடுத்த 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆர்.எஸ் பாரதி எச்சரித்தார்.
பொய் மட்டுமே பேசி தனது அரசியல் பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டுள்ளதாகவும், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக செயலாற்றி வரும் மு.க ஸ்டாலின் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலை பொய் கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் கூறினார். அரசு பயணத்தை சொந்த முதலீடு செய்ய பயணம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டும் அண்ணாமலை, பிரதமர் மோடி 64 முறை வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தையும் சொந்த முதலீடு செய்வதற்கான பயணமா என்றுதான் கூறுவாரா என கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சரை இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் திமுக சார்பில் எடுக்கப்படும் சட்ட போராட்டத்தை அவரால் தாங்க முடியாது எனவும் ஆர்.எஸ் பாரதி எச்சரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu