தேர்தல் முடிவிற்கு பின்னர் மாற்றத்தை சந்திக்க இருக்கும் திமுக, அதிமுக கட்சிகள்
இந்தியா முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் தொடர்பான கணிப்புகள், தகவல்களை வைத்து விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முக்கிய கட்சிகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து கட்சிகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள் பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:-
2026 சட்டசபை தேர்தல் வரை அண்ணாமலையை பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவு. அண்ணாமலை வருகைக்குப் பிறகு தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி என்பது கணிசமாக வளர்ந்து வருகிறது. பாஜகவை இங்கு ஒரு பேசுபொருளாக ஆக்கியதால், திமுகவுக்கு எதிராக கடுமையாக களமாடும் போராளியாக அண்ணாமலையை டெல்லி தலைமை பார்க்கிறது.
ஒவ்வொரு கட்சியிலுமே தேர்தல் முடிவுகள் வந்த பிறகு புகார்கள், குற்றச்சாட்டுகள் வரும். ஆனால், பாஜகவில் இப்போதே குற்றச்சாட்டுகள் அதிகளவில் வந்துள்ளன. வேட்பாளராக நின்றவர்கள் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். சில நிர்வாகிகள் பணத்தை அமுக்கிக் கொண்டதாக கட்சியினரே போஸ்டர் ஒட்டினர். கோவை, தென் சென்னை உள்ளிட்ட தொகுதிகளில் தலைமை கொடுத்த பணத்தை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை எனப் புகார் கிளம்பியுள்ளது.
புகார்கள் வரும் பகுதிகளில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அண்ணாமலை சொல்லி இருக்கிறாராம். கட்சியில் இளைஞர்களுக்கு மாநில, மாவட்ட அளவிலான பொறுப்புகளை அதிகம் அளித்து புது ரத்தம் பாய்ச்சும் முடிவில் அண்ணாமலை இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல நிர்வாகிகள் மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வந்த பிறகு திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளிலுமே அதிரடி நடவடிக்கைகள், மாற்றங்கள் இருக்கும். திமுக ஆளுங்கட்சியாகவும், வலிமையான கூட்டணியாகவும் இருப்பதால் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும் என கட்டளை இட்டிருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சில தொகுதிகளில் உள்ளடி வேலைகள் நடந்துள்ளதாகவும், ஆறேழு தொகுதிகளில் தோல்வியே கூட ஏற்படலாம் என்றும் உளவுத்துறை முதல்வர் ஸ்டாலினுக்கு ரகசிய ரிப்போர்ட் கொடுத்துள்ளது. தனியார் மூலம் நடத்தப்பட்ட சர்வே ரிப்போர்ட்டும் ஸ்டாலினுக்கு நேரடியாக சென்றுள்ளது.
சில முக்கிய விஐபி தொகுதிகளில், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் சரிவர பணியாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஸ்டாலினுக்கு போயுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியடையும் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் பதவி பறிக்கப்படும் என அறிவாலய வட்டாரத்தில் சொல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிய பிறகு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பாஜகவை கடுமையாக விமர்சிக்கவில்லை. 2 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகு, பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான வாய்ப்பு குறைவு என்ற தகவல்கள் வர வர அதிமுகவினர் கொஞ்சம் வீராவேசம் காட்டுகின்றனரோ என்று நினைக்க தோன்றுகிறது.
பாஜக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வரும் என்ற கணிப்புகள் சரிந்து, பாஜக 250 சீட்களுக்கு குறைவாகத்தான் வரும் என்ற நிலை உருவாவதாகவும், பாஜக எதிர்பார்த்தபடி நாடு முழுவதும் 400+ இடங்கள் பாஜக கூட்டணிக்கு கிடைக்காது என அடுத்தடுத்து தகவல்கள் வருகின்றன. எனவே, பாஜகவை வேகமாக அடிக்கும் நிலைப்பாட்டை ஜெயக்குமார் உள்ளிட்டோர் எடுத்திருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu