அதிமுக கூட்டணியில் தேமுதிக? அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு
தமிழகத்தில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வார்டுகளை பங்கீடு செய்வதில் திமுக - அதிமுக கூட்டணி கட்சிகள் திணறி வருகின்றன. பெரும்பாலான இடங்களில் போட்டியிட அதிமுக - திமுக இரண்டுமே விரும்பும் நிலையில், கூட்டணி கட்சிகள் அதிக இடங்களை கேட்டு நச்சரிப்பதால், உடன்பாடு எட்டுவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, கேட்ட எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத அதிருப்தியில், அதிமுக அணியில் இருந்து பாஜக வெளியேவிட்டது; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக, அதன் தலைவர் அண்ணாமலை, அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்.
ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறிவிட்ட நிலையில், தற்போது பாஜகவும் உறவை முறித்துக் கொண்டது, அதிமுக தொண்டர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கொஞ்சம் விட்டுக் கொடுத்து, பாஜகவை தக்க வைத்திருக்கலாமே என்ற ரீதியில், அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரே கூறுவதை கேட்க முடிகிறது.
இந்த நிலையில், எந்த கூட்டணியிலும் சேர முடியாமல் தவித்து வரும் தேமுதிகவை, அதிமுக பக்கம் கொண்டுவர முயற்சிகள் நடப்பதாக, தகவல் கசிந்துள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில், டிடிவி தினகரனின் அமமுக, சரத்குமாரின் சமகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்த தேமுதிக, சொல்லிக் கொள்ளும்படி வாக்கு வங்கியை நிரூபிக்கவில்லை. எனவே, அக்கட்சியை கூட்டணியில் சேர்க்க திமுக - அதிமுக இரண்டுமே ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், தற்போது பாஜக வெளியேறிய நிலையில், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது, சற்று பலம் தருவதாக இருக்கும் என்று அதிமுக தரப்பில் கருதுகிறார்களாம். அதேபோல், எப்படி உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது என்று தவித்து கொண்டிருந்த தேமுதிக தலைமையும், அதிமுகவுடன் கைகோர்க்க தயாராகவே உள்ளது. காரணம், தேமுதிகவுக்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வரும் பாமக, இப்போது அதிமுக கூட்டணியில் இல்லை.
இந்த நிலையில், அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களுடன், தேமுதிக தலைமை நிலைய நிர்வாகி பார்த்தசாரதி தலைமையிலான குழு ரகசிய பேச்சில் ஈடுபட்டு வருவதாக, தேமுதிக வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. எனவே, அதிமுகவுடன் தேமுதிக கைகோர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளதாகவும், விரைவில் உடன்பாடு குறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu