அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த ஆண்டு புழல் சிறையில் தான் தீபாவளி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த ஆண்டு புழல் சிறையில் தான் தீபாவளி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி.

சிறைக்காவல் நீட்டிப்பினால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இந்த ஆண்டு புழல் சிறையில் தான் தீபாவளி கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் வருகிற 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்த ஆண்டு தீபாவளியை சிறையிலேயே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத் தீர்வுகள் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் பணம் வாங்கிக் கொண்டு டிரைவர், கண்டக்டர் பணியிடங்கள் நிரப்பியதில் ஏற்பட்ட மோசடி புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

சென்னை ஐகோர்ட்டில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடித்து தீர்ப்பு வழங்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக துறை அதிகாரிகள் தங்களது காவலில் வைத்து விசாரணை நடத்தினார்கள். ஜூன் 14ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது .அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டதும் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரது இதயத்தில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து கோர்ட்டு உத்தரவின்படி அவருக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் அவர் பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாக சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். தற்போது வரை அவர் அங்கு தான் உள்ளார்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக மட்டும் உள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் அவரது சிறைக் காவல் இன்றுடன் முடிவடைவதால் காணொலி காட்சி மூலம் சென்னை செசன்ஸ் கோர்ட் நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். அவரது சிறைக்காவலை வருகிற 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் சிறைகாவல் பத்தாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் மிகவும் சக்தி வாய்ந்த அமைச்சராக விளங்கி வந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது வரை அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தாலும் அமலாக்கத்துறை வழக்கு காரணமாக அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை செந்தில் பாலாஜி சிறையிலேயே கொண்டாடக் கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture