சட்டசபை கலைப்பு: நிதிஷ்குமாரின் திடீர் முடிவால் பீகார் அரசியலில் பரபரப்பு

சட்டசபை கலைப்பு: நிதிஷ்குமாரின் திடீர் முடிவால் பீகார் அரசியலில் பரபரப்பு

பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

சட்டசபை கலைக்க முடிவு செய்துள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் திடீர் முடிவால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பீகார் சட்டசபையை கலைக்க பரிந்துரைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ம் ஆண்டு நடைபெற்றது. அத்தேர்தலில் பா.ஜ.க, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் லாலுவின் ஆர்ஜேடி கட்சி 75 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் நிதிஷ்குமாரின் ஜேடியூ 43 இடங்களிலும் வென்றன. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பாஜக, ஜேடியூ மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வரானார்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க.வுடனான கூட்டணியை நிதிஷ்குமாரின் ஜேடியூ முறித்துக் கொண்டது. ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இணைந்து நிதிஷ்குமார் தலைமையில் புதிய கூட்டண்ணி ஆட்சி அமைந்தது. இதனடிப்படையில்தான் லோக்சபா தேர்தலுக்கும் பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் தீவிரம் காட்டினார். அப்படி உருவான "இந்தியா" கூட்டணி இப்போது காங்கிரஸ் வசமாகிவிட்டது. "இந்தியா" கூட்டணியில் ஓரம் கட்டப்பட்ட நிதிஷ்: தாம் உருவாக்கிய "இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் கனவுடன் வலம் வந்தார் நிதிஷ்குமார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து கடுப்பேற்றிவிட்டனர். இதனால் "இந்தியா" கூட்டணி மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார் நிதிஷ்குமார். அவரை சமாதானப்படுத்துவதற்கு ராகுல் காந்தியும் முயற்சி செய்தார்.

இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு திடீரென பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்தது. இது பீகார் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. பீகாரின் கக்கன், காமராஜர் என போற்றப்படுகிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் தலைவராக திகழ்ந்தவர் கர்பூரி தாக்கூர். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுத்ததால், பாஜகவையும் பிரதமர் மோடியையும் வானவளாவ புகழ்ந்து தள்ளினார் நிதிஷ்குமார்.

அத்துடன் நிற்காமல் போகிற போக்கில் வாரிசு அரசியலையும் வெளுவெளுவென வெளுத்துவிட்டார் நிதிஷ்குமார். இது லாலு பிரசாத் யாதவின் குடும்பத்தினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. லாலு பிரசாத் குடும்பமே அரசியலில்தான் இருக்கிறது. லாலு மகன் தேஜஸ்வி யாதவ்தான் துணை முதல்வராகவும் இருக்கிறார். மேலும் "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸுடனான உறவை மேற்கு வங்கத்திலும் பஞ்சாப்பிலும் முறித்து கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் அறிவித்திருக்கின்றன. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் இந்த திடீர் பாஜக பாசம், லாலு மீதான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.

இதனிடையே பீகார் மாநில சட்டசபையை கலைப்பது தொடர்பாக நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் "இந்தியா" கூட்டணியை உதறி தள்ளிவிட்டு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே மீண்டும் இணையவும் நிதிஷ்குமார் முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கைகள் பீகார் அரசியலில் மட்டும் இன்றி தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story