பா.ஜ.வுடன் கூட்டணிக்கு அதிருப்தி: த.மா.கா. முக்கிய நிர்வாகி விலகல்

பா.ஜ.வுடன் கூட்டணிக்கு அதிருப்தி: த.மா.கா. முக்கிய நிர்வாகி விலகல்

பிரதமர் மோடியுடன் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன்.

பா.ஜ.வுடன் கூட்டணிக்கு அதிருப்தி: த.மா.கா. முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்து உள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருந்து வந்த டி என் அசோகன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2- வது வாரத்தில் தேர்தல் தேதி வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு என தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேறு எந்த கட்சியும் இதுவரை கூட்டணி வைக்க முன்வரவில்லை. தேமுதிக, பாமகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோல் அதிமுகவில் இருந்து கழற்றி விடப்பட்ட பாஜகவும் தனது தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியது. பாஜகவிலும் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வராத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முதல் கட்சியாக பாஜகவுடன் கூட்டணியை அறிவித்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திடீர் திருப்பமாக வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறுகையில், "நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலை பாஜக உடன் இணைந்து தமிழ் மாநில காங்கிரஸ் எதிர்கொள்ளும். பிரதமர் மோடி நாளை பங்கேற்கும் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக ஆதரவு அளித்து பாஜக கூட்டணியில் இடம்பெறுகிறோம்" என்று கூறினார்.

பாஜக தலைவர்கள் பலரும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை குடும்ப அரசியல் செய்வதாக விமர்சித்து வரும் நிலையில், ஜிகே மூப்பனாரின் மகனான ஜிகே வாசன் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக அறிவித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் ஜிகே வாசனுக்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் டிஎன் அசோகன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டி என் அசோகன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மரியாதைக்குரிய மக்கள் தளபதி ஐயா ஜிகே வாசன் எம்பி அவர்களுக்கு, ஐயா, நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி, 1980யில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சுட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். அவரைத் தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன். 1996யில் மறைந்த மக்கள் தலைவர் ஐயா அவர்கள் எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். அதே போல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தங்களின் மேலான தலைமையின் கீழ் தலைமை நிலை செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணி என்று ஜிகே வாசன் அறிவித்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் யுவராஜா அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய யுவராஜா மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்று கூறியதும் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story