அ.தி.மு.க., தினகரன் வசமாகுமாம்! ஆருடம் சொல்கிறார் அண்ணாமலை

அ.தி.மு.க., தினகரன் வசமாகுமாம்! ஆருடம் சொல்கிறார் அண்ணாமலை
X

தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்யும் பாஜக தலைவர் அண்ணாமலை 

தேர்தல் முடிவுக்குப்பின்னர் அதிமுக தினகரன் வசமாகும், இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது, காணாமல் போகும் என தேனியில் பாஜ., தலைவர் அண்ணாமலை அதிரடியாக கூறினார்

தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவுக்குப்பின்னர் அதிமுக தினகரன் வசமாகும், இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது, காணாமல் போகும் என தேனியில் அமமுக பொதுசெயலர் தினகரனை ஆதரித்து பிரசாரம் செய்த பாஜ., தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசினார்.

பிரசாரத்தில் அண்ணாமலை பேசியதாவது; பா.ஜ., கூட்டணியில் அனைத்து தொகுதிகளிலும் மூத்த தலைவர்களே போட்டியிடுகின்றனர். தேனி தொகுதியில் டிடிவி தினகரன் சார்பில் நிற்கும் வேட்பாளர் கூட வெற்றி பெறுவார். ஆனால் டிடிவி தினகரன் நேரடியாக களம் இறங்க காரணம், பா.ஜ., 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தில் புதிய அரசியலை மக்களுக்கு காட்ட வேண்டும்.

போலியான தலைவர்களை தொண்டர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். தேனியில் டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என இரண்டு வேட்பாளர்கள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். இபிஎஸ் தலைமையிலான அதிமுகவும், திமுகவும் வேறு வேறு அல்ல, ஒன்றுதான்.

ஆனால் தொண்டர்கள் ஒன்று சேரவில்லை. ஏப்ரல் 19ம் தேதி, தேனி தொகுதியில், அதிமுக தொண்டர்களும் தினகரனுக்கே ஓட்டளிப்பார்கள். டிடிவி தினகரனுக்கு முழுமையான ஆதரவை கொடுக்க வேண்டும்.

16 ஆண்டுகளுக்குப்பின் தினகரன் வனவாசத்தை முடித்து விட்டு அரசியல் களத்திற்கு வந்துள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரன் பக்கமே உள்ளனர். இபிஎஸ் செய்த துரோகத்தை மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள். இபிஎஸ் கட்சியை கான்ட்ராக்டர்களுக்கு தாரை வார்த்து விட்டார். அதிமுக தினகரன் கையில் இருந்திருந்தால் ஸ்டாலின் முதல்வராகி இருக்க மாட்டார். விரைவில் அதிமுக தினகரன் வசமாகும். அதிமுக எந்த உண்மையான தலைவர் கையில் இருக்க வேண்டுமோ அதன் கையில் அதிமுக செல்லத்தான் போகிறது. இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் அண்ணன் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும்.

2014ஆம் ஆண்டில் 283 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 2019ஆம் ஆண்டில் 303 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாஜக வென்றது, ஆனால் இப்போது 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நமக்கு தேவை, அதில் நமது டிடிவி தினகரன் அண்ணனும் இருக்க வேண்டும். இந்தியாவை காப்பாற்ற ஸ்டாலின் அழைக்கிறேன் என்று சொல்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டை ஸ்டாலினிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இங்கு நிற்கிறோம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் அரசியலில் அண்ணாமலை ஒரு அறியாப்பிள்ளை. டிடிவி தினகரனுக்கும், பா.ஜ., இடையே என்ன ரகசிய ஒப்பந்தம் உள்ளது என தெரியவில்லை. தமிழகத்தில் மதவாதம், ஜாதிவாத அரசியலுக்கு மக்கள் ஆதரவு தந்தது இல்லை. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.

Tags

Next Story
ai marketing future