அவதூறு பிரச்சார வழக்கு: ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை

அவதூறு பிரச்சார வழக்கு: ராகுல் காந்திக்கு   2 வருடம் சிறைத்தண்டனை
X

ராகுல் காந்தி எம்.பி.

அவதூறு பிரச்சார வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி எம்.பி.க்கு சூரத் நீதிமன்றம் இரண்டு வருடம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

மோடி பற்றி பிரச்சாரம்

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ’அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ எனக் கேள்வி எழுப்பினார். அவரது இந்த பிரச்சாரம் பா.ஜ.க.வினரை மிகுந்த கோபமடைய செய்தது.

நீதிமன்றத்தில் வழக்கு

குறிப்பாக பிரதமர் மோடிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டினர். உடனே ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநில முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஸ் எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்றுக் கொண்டார்.

மறுபுறம் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. கடைசியாக 2021 அக்டோபர் தனது வாக்குமூலத்தை பதிவு செய்து சூரத் நீதிமன்றத்திற்கு ராகுல் காந்தி நேரில் சென்றிருந்தார். கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

நிர்வாகிகள் நம்பிக்கை

இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணிஷ் தோஷி, ’தீர்ப்பு வழங்கப்படும் போது ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருவார். நமது நீதித்துறையின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். இன்று வழங்கப்பட உள்ள தீர்ப்பில் நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம் என்றார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அனைத்து மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு துணை நிற்போம்என்று தெரிவித்தார். மேலும் சூரத் நகர் முழுவதும் ராகுல் காந்தி, பகத் சிங், சுகதேவ் ஆகியோர் அடங்கிய போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சியினர் ஒட்டியிருந்தனர்

ராகுல் காந்திக்கு சிறை

அதில், ’ஜனநாயகம் காக்க சூரத்திற்கு செல்வோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் ராகுல் காந்திக்கு துணை நிற்போம் என்பதை உணர்த்தும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இந்திய தண்டனை சட்டப் பிரிவு 504ன் கீழ் குற்றவாளி என உத்தரவிடப்பட்டது.

அதேசமயம் 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என்று அனுமதி வழங்கி, கூடவே ஜாமீனும் வழங்கியது. இந்நிலையில் சிறை தண்டனை குறித்த அறிவிப்பை பா.ஜ.க. எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி பெரிதும் வரவேற்றுள்ளார். அடுத்தகட்டமாக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வாரா? இல்லை தண்டனையை ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!