சிபிஎம் வேட்பாளர்கள்:மதுரையில் மீண்டும் வெங்கடேசன் திண்டுக்கல்லில் சச்சிதானந்தம்

சிபிஎம் வேட்பாளர்கள்:மதுரையில் மீண்டும் வெங்கடேசன் திண்டுக்கல்லில் சச்சிதானந்தம்

சிபிஎம் வேட்பாளர்கள் வெங்கடேசன் மற்றும்  சச்சிதானந்தம்.

மதுரையில் மீண்டும் வெங்கடேசன் திண்டுக்கல்லில் சச்சிதானந்தம் போட்டியிடுவார்கள் என சிபிஎம் அறிவித்து உள்ளது.

லோக்சபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தொகுதியில் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தமும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரி காலம் முதல் சிபிஐஎம் கட்சியில் முழுநேர உறுப்பினராக இருப்பவர் சு.வெங்கடேசன்.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த முறை மதுரை, கோவை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை கோவைக்கு பதிலாக திண்டுக்கல் சிபிஐஎம் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டு தொகுதிகளில் யார் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர் முகம்மது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 15 மாநில செயற்குழு உறுப்பினர்களும், 85 மாநில குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மதுரை தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தமும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார்.

எழுத்தாளரான சு.வெங்கடேசன், நீண்டகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்து வருகிறார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விபட்டி தான் சு.வெங்கடேசனுக்கு சொந்த ஊர். மதுரை திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலை பட்டம் முடித்தவர் சு.வெங்கடேசன். கல்லூரி காலத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வந்துள்ளார்.

உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்கும் போராட்டத்தில் தீவிர பங்கு கொண்டார் சு.வெங்கடேசன். மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் கலை, இலக்கிய, பண்பாட்டுச் செயல்பாடுகள் மூலம் கவனம் பெற்றவர் சு.வெங்கடேசன். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் சு.வெங்கடேசன் கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மேடைகளில் கவிஞராக அறிமுகமான சு.வெங்கடேசன், தமுஎகசவின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். எழுத்தாளர் சு.வெங்கடேசன்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வரும் சு.வெங்கடேசன் தனது முதல் நாவலான 'காவல் கோட்டம்’ நாவலுக்காக, 2011ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார். சு.வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி’ வரலாற்று நாவல் மிகப்பெரிய வாசகப் பரப்பைச் சென்றடைந்தது. மதுரை சிட்டிங் எம்.பி: மதுரையில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிட்டார். சுமார் 14.41 லட்சம் வாக்குகள் பெற்று, 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார் சு.வெங்கடேசன்.

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறார். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக குரல் எழுப்புவது ஒருபுறம் இருக்க, மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்காக சமூக வலைதளங்களிலும் தொடர்ச்சியாக ஆக்டிவ்வாக இயங்கி வருபவர். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அத்தனை பகுதிகளுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளதோடு, தொகுதி மக்களுக்காக ஆளும் அரசுகளிடம் ஏராளமான கோரிக்கைகளையும் வைத்துள்ளார். தக் லைஃப்: எம்.பியை காணவில்லை என மதுரை முழுக்க எதிர்க்கட்சிகள் போஸ்டர் ஒட்டிய நிலையில், “நான் இங்கேயேதான் இருக்கிறேன்” என போஸ்டருக்கு அருகிலேயே நின்று போட்டோ எடுத்து வெளியிட்டு 'தக் லைஃப் மொமெண்ட்’ கொடுத்தார் சு.வெங்கடேசன். சுமார் 28 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் சு.வெங்கடேசன், மீண்டும் அதே மதுரை தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story