தமிழக அரசு மதுக்கடைகளை திறக்ககூடாது - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்ககூடாது - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை விடுத்துள்ளது

டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு வரும் ஜூன் 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் தேதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூடுதலான தளர்வுகளுடன் கூடிய தமிழக அரசின் இந்த அறிவிப்பில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தால் மதுகுடிப்போர் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவர். இது நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும் என்ற காரணத்தினால் தான் கடந்த மே 10 முதல் இயங்க தடை விதிக்கப்பட்டன. இந்த சூழலில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், மீண்டும் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கும் முடிவு தமிழக அரசின் கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் பின்னடைவையே ஏற்படுத்தும்.

கடந்த ஆட்சியில் முதல் அலையின் போது இதுபோன்றதொரு டாஸ்மாக் மதுக்கடையை திறக்கும் தவறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, அதற்கு எதிராக போராட்டங்களை நடத்தியது அப்போதைய எதிர்கட்சியான தற்போதைய ஆளும் கட்சி. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் அதே தவறை செய்யத் துணிவது நியாயமான நடவடிக்கை தானா? என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமின்றி, தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையில் பூரண மதுவிலக்கு மிக முக்கியமானது. அதேபோல் கடந்த ஆட்சியின் போது திமுகவின் பல கோரிக்கைகளும், அறிக்கைகளும், வாக்குறுதிகளும் பூரண மதுவிலக்கு தொடர்பானவையாகவே இருந்துள்ள சூழலில், இந்த கோரிக்கையை செயல்படுத்தும் வாய்ப்பாக இந்த கொரோனா பெருந்தொற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கை அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மதுகுடிப்போர் குடியை மறந்து, கொரோனாவுக்கு அஞ்சி தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இருந்துவந்த நிலையில், மீண்டும் அவர்களை மதுவின் பக்கம் திசைதிருப்பும் நடவடிக்கை வருந்தத்தக்கது.

அதேபோல் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முனையும் தமிழக அரசுக்கு முட்டுக்கட்டையாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு அமைந்துவிடும் சூழல் உருவாகியுள்ளது. காரணம் 'கொரோனா தடுப்பூசி போட்டதும் ஐந்து நாட்களுக்கு மதுவைத் தொடக்கூடாது. 45 நாட்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம்' என்று கொரோனா தடுப்பூசி போடும் இடத்தில் வலியுறுத்துகிறார்கள். ஆனால், மதுக்கடைகளை திறந்து வைத்தபிறகு இந்த அறிவுறுத்தல்களை மதுவை குடிப்பவர்கள் ஏற்பார்களா? அல்லது இந்த அறிவுறுத்தல்களை பின்பற்றி தடுப்பூசி செலுத்த முன்வருவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

மது, ஒருவரின் உடலில் தொற்று வைரஸ்களுக்கு எதிராக சண்டையிடும் திறனையும் குறைக்கக் கூடியது. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்ட நேரத்தில் மதுவை மறப்பதே நல்லது என்பதே மருத்துவர்களின் பொதுவான அறிவுறுத்தலாக இருக்கும் சூழலில், முழுமையான அதேவேளையில் பயனுள்ள தடுப்பூசி திட்டத்தை தமிழக அரசு எப்படி செயல்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி வெற்றிபெறவும், பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமான மதுவுக்கு எதிராக பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும், இந்த கொரோனா பெருந்தொற்றுக்கால தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதை கருத்தில்கொண்டு, டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு பூரண மதுவிலக்கை செயல்படுத்துவது நோக்கி தமிழக அரசு நகர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story