கோவையில் வருகிற 18-ம்தேதி மோடியின் ரோடுஷோ பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி

கோவையில் வருகிற 18-ம்தேதி மோடியின் ரோடுஷோ பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி
X

பிரதமர் மோடியின் ரோடுஷோ பேரணிக்கு அனுமதி வழங்கிய சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

கோவையில் வருகிற 18-ம்தேதி மோடியின் ரோடுஷோ பேரணிக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

18 ம் தேதி பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காவல்துறையின் வாதத்தை ஏற்காத நிலையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க அதிரடியாக உத்தரவிட்டார்.

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். மீண்டும் பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் மோடி கோவை வருகிறார்.

இந்த வேளையில் கோவை கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு வரை திறந்த காரில் நின்றவாறு பிரதமர் மோடி பேரணி செல்ல திட்டமிடப்பட்டது. மொத்தம் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்தியஇணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்துகொள்வதாக கோவை மாவட்ட பாஜக அறிவித்திருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி கோவை காவல்துறையிடம் பாஜக கடிதம் வழங்கினார்.

ஆனால் கோவை காவல்துறை பிரதமர் மோடியின் பேரணி நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கவில்லை. பாதுகாப்பு காரணம் கருதி கோவை காவல்துறை இன்று அனுமதி மறுத்துவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ் குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் ஆஜராகி, வரும் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடுஷோ நடத்தி உள்ளதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், 18ஆம் தேதி நிகழ்ச்சிக்கு 14 ம் தேதி கடிதம் தான் கொடுத்ததாகவும், 18 மற்றும் 19 ம் தேதி பொதுத்தேர்வு உள்ளதாகவும், கோவை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையும், காவல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்து ஒத்திவைத்தார். அதன்பிறகு மாலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், வரும் 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரும் 18 ம் தேதி பிரதமர் மோடியின் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture