சர்ச்சைக்குள்ளானது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் ஒழிப்பு பற்றிய பேச்சு

சர்ச்சைக்குள்ளானது உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் ஒழிப்பு பற்றிய பேச்சு
X

சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் உதய நிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் நேற்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை எதிர்ப்பதைவிட அதனை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.


அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. சனாதன தர்மத்தைப் பின்பற்றும் இந்தியாவின் 80 சதவிகித மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுப்பதாக பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது ’எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதேபோல ஒரு சாரார் கண்டனம் எழுப்பிய நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தனர். அதனை குறிப்பிட்டு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்போராட்டத்தை சந்திக்கத் தயார் என்றார். மேலும், திராவிட நிலத்தில் இருந்து சனாதனத்தை ஒழிக்கும் நோக்கம் சிறிதும் குறையாது என்று உதயநிதி டிவிட்டரில் பதிவிட்டார்.


மேலும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப் படுகொலை செய்ய வேண்டும் என தான் ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை என்றும் சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது மனித நேயத்தையும் மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல, சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்றும் சாடியுள்ளார். நீதிமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகக் கூறியுள்ள உதயநிதி, பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் சனாதனத்தை ஒழிப்பேன் என பேசியதை மறுக்கவில்லை. ஆனால் அதனை திசை திருப்பி பொய்யாக பிரச்சாரம் செய்வதற்கு தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதாவின் தகவல் தொழில் நுட்ப பிரிவு மற்றும் அவர்களுக்கு ஆதரவான ஊடகங்கள் இதனை ஒட்டுமொத்த திமுகவிற்கும் எதிராக பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.உதயநிதி ஸ்டாலினின் செய்தி சத்தமாகவும் தெளிவாகவும் சென்றுள்ளது. அதன் உள்ளார்ந்த மதவெறி மற்றும் வன்முறை அவரது ஆதரவாளர்களில் பலரை மகிழ்ச்சியடையச் செய்யலாம், ஆனால் அது அவருக்கு எதிரான வாக்குகளை துருவப்படுத்தி ஒருங்கிணைக்கும் என அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

ஈ.வி.ராமசாமி ‘பெரியார்’ மூலம் நீண்டகாலமாக நஞ்சூட்டப்பட்டிருக்கும் தமிழகத்தில், சனாதன தர்மத்தை அல்லது காலங்காலமான இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். .

இந்துக்களை மலேரியா கொசுக்கள் மற்றும் கோவிட் வைரஸுடன் ஒப்பிடும் உதயநிதியின் கூச்சல், இன்று நாம் காணும் சீற்றம் இல்லாமல் போயிருக்கலாம். சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பராந்தகர்கள் போன்ற மிகப் பெரிய இந்து சாம்ராஜ்யங்களைக் கண்ட ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் இத்தகைய இந்து வெறுப்பு இயல்பாக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சை பாரதிய ஜனதா கட்சி இந்துக்களுக்கு எதிராக திருப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!