பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
X

தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பிறகு செய்தியாளர்களுடன் பேசிய காங். தலைவர் அபிஷேக் மனு சிங்வி 

பாஜக மீது 16 குற்றச்சாட்டுகள் அடங்கிய புகார் கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் இன்று காங்கிரஸ் அளித்துள்ளது

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் ஏப். 21அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்க நகைகளையும், குடும்பத்தினரின் சொத்து மதிப்புகளையும் பங்கிட்டு அதனை முஸ்லிம்களுக்கு மறுபகிர்வு செய்வார்கள் என்று பேசியிருந்தார்.

நாட்டின் வளங்களில் சிறுபான்மையினருக்குத்தான் முதல் உரிமை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஆட்சிக்காலத்தின்போது கூறியிருந்தார் என்பதையும் பிரதமர் மோடி மேற்கோள்காட்டிப் பேசினார்.

பிரதமரின் பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இத்தகைய வெறுப்புப்பேச்சை கண்டிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தனது தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புப் பேச்சை பிரதமர் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பேசிய பேச்சுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் டாக்டர். அபிஷேக் மனு சிங்வி, குர்தீப் சப்பல் மற்றும் சுப்ரியா ஸ்ரீநேட் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழுவினர், இன்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.

அதில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ஐ பாஜக மீறியுள்ளதாக அக்கட்சிக்கு எதிராக 16 புகார்களை அளித்துள்ளது இந்த குழு. அதுமட்டுமன்றி, உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை அவர்கள் மீறியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேற்கண்ட புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம் என தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். தெரிவித்துள்ளார்

Tags

Next Story