முற்றுகிறது மோதல் விவகாரம்: டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ரவி

முற்றுகிறது மோதல் விவகாரம்: டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.
தமிழக அரசுடன் மோதல் விவகாரம் மேலும் மோசமானதால் தமிழக ஆளுநர் ரவி திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநருக்கு முதல்வருக்கும் ஏற்பட்டுள்ள மோதலின் உச்சகட்டமாக ஆளுநர் ரவி திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர்.என். ரவி இவருக்கும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து மோதல்கள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய நீட் தேர்வு மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதில் அந்த பத்து மசோதாக்களையும் மீண்டும் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திடீர் என இன்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் அவர் தமிழக அரசு மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பியுள்ள மசோதாக்கள் பற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ரவி சந்தித்து பேசுகிறார். அதுமட்டுமல்லாமல் தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ரவி மீது தமிழக அரசு ஏற்கனவே வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்குகளில் ஆஜர் ஆவது தொடர்பாகவும் சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story