இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி: அடித்துக்கூறுகிறார் பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.
விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இதில் தங்கள் பிளான் என்ன என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கே திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது.
அதில் திமுக கூட்டணி ஏற்கனவே கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் கூட முடிக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அதிமுகவில் அப்படி இல்லை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இது மட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வமும் கூட இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம் எனத் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே இது தொடர்பாக அவரே விளக்கத்தைக் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், "உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்" என்றார். தொடர்ந்து எப்படி உறுதியாக சொல்கிறீர்கள் என்று கேள்விக்கு, "பொறுத்து இருந்து பாருங்கள்.." என்று சொன்ன ஓபிஎஸ் கொஞ்சம் கேப் விட்டு, "இந்த விவகாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை எடப்பாடிக்கு வந்த அனைத்து தீர்ப்புகளும் தற்காலிகமானது என்றே கூறியுள்ளனர். கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிவில் சூட் தான் கவனிக்கும் என்றும் கூறிவிட்டனர். இதற்கு முன்பு வழங்கப்பட்டு எந்த தீர்ப்பும் இதைக் கட்டுப்படுத்தாது என்றும் கூறிவிட்டனர். தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமியை இன்று யாருமே நம்பாத சூழல் ஏற்பட்டுவிட்டது. யாரெல்லாம் அவருக்கு நல்லது செய்தார்களோ.. அவர்களுக்கு நன்றியுடன் அவர் நடந்து கொள்ளவில்லை. எனவே, எந்தவொரு அரசியல் கட்சியும் கூட்டணிக்காக அவரை நாடிச் செல்வதில்லை" என்று அவர் தெரிவித்தார். மேலும், உங்கள் மகன் இந்தத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, "மகன் போட்டியிடுவாரா பொறுப்பு இருந்து பாருங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
சசிகலா குறித்த கேள்விக்கு அவர், "டிடிவி தினகரன் உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.. சசிகலாவிடம் இணைந்து பணியாற்ற முடியுமா எனக் கேட்கிறீர்கள். அதற்கு ஓகேவா என்று அவரிடம் சென்று முதலில் கேளுங்கள்.. மேலும், ரஜினி அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர். சசிகலா அழைத்ததால் ரஜினி நேரில் சென்று இருப்பார்" என்றார்.
மேலும் பாஜக உடனான கூட்டணி குறித்துப் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாகவே நாங்கள் பாஜகவின் என்டிஏ உடன் தான் கூட்டணியில் இணைந்து பயணித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி தான் இந்த கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். முதலில் விமர்சித்தது எடப்பாடி அணி..அதற்கு அண்ணாமலை பதில் தான் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். சி.வி. சண்முகம் ஏதோ என்னைப் பற்றிச் சொன்னார் என்கிறீர்கள்.. அவருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்றார். மேலும், இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தைத் தொடர்பு கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu