மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: இந்தியா கூட்டணிக்கு கல்தா?

மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்: இந்தியா கூட்டணிக்கு கல்தா?

முதல்வர் ஸ்டாலின் -பிரதமர் மோடி

டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்கிறார். இதனால் இந்தியா கூட்டணிக்கு கல்தா கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்புவது தான் அவரது திட்டம். ஆனால் தற்போது அந்த திட்டத்தில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படப்போகிறது.

புயல் பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி கேட்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. மத்திய குழுவினர் டெல்லி சென்று அறிக்கையை சமர்ப்பித்ததுமே, தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு டெல்லி சென்று கூடுதல் நிவாரண நிதி கேட்க உள்ளதாக தகவல்கள் கடந்த வாரம் வெளியானது.

இவர்கள் 2 பேருமே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து, புயல்-வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண நிதியை வழங்குமாறு வலியுறுத்த போவதாகவும், என்னென்ன சேதத்துக்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்ற விவரங்களுடன் லிஸ்ட்டை, கோரிக்கை மனுவாகவும் அமித்ஷாவிடம் வழங்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன.

அதேபோல, முதல்வர் ஸ்டாலினே நிவாரண நிதி கேட்க, டெல்லி செல்லலாம் என்றும், இதுகுறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சொன்னார்கள். ஆனால், அரசியல் ரீதியாக, பிரதமர் மோடியை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்பதை, "இந்தியா" கூட்டணி தலைவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவே, மோடியை ஸ்டாலின் சந்திப்பதை தவிர்க்கவும் வாய்ப்பு உள்ளதாக சொன்னார்கள். அதனால்தான், அமித்ஷாவை சந்தித்து, வெள்ள நிவாரண தொகையை கூடுதலாக பெறுவதற்குரிய கோரிக்கை மனு வழங்குவதற்கான ஏற்பாடுகளும், உதயநிதி தரப்பில் செய்யப்பட்டு வருவதாக கூறினார்கள். ஆனால், இப்போது விவகாரமே வேறுமாதிரியாக திரும்பியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்து, பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக மோடியின் அப்பாயிண்ட்மென்ட்டும் கேட்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதாவது, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கிய சேதத்தில் இருந்து மீளாத தி.மு.க. அரசுக்கு, குமரி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் பெய்து வரும் பேய் மழையில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் மேலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்புகளுக்கான நிவாரண நிதி உதவியை விரைந்து வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைப்பதற்காக பிரதமர் மோடியை சந்திக்க முடிவு செய்யப்பட்டு, மோடியிடம் அப்பாயின்ட்மெண்ட் கேட்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குமரி உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கவிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

இந்த சந்திப்பின்போது, நிவாரண உதவி கோருவது மட்டுமல்ல, ராஜ்நாத்சிங் - ஸ்டாலின் சந்திப்பின்போது பேசப்பட்ட அரசியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தி.மு.க. தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது. தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலக்கப்பட வேண்டும் என்பது மோடி - அமித்ஷாவின் எதிர்பார்ப்பாக உள்ளதாம்.அந்த எதிர்பார்ப்பை தி.மு.க. நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாகவும் இருக்கிறதாம். இந்த அரசியல் குறித்து தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஸ்டாலின் தெரிவிப்பார் என்கிறது தி.மு.க. வட்டாரம். அநேகமாக, இந்த சந்திப்பிற்கு பிறகு கூடுதல் தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து விட்டால் அவர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழகத்திற்கு திரும்புவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி நடந்தால் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகி காங்கிரசுக்கு கல்தா கொடுக்கும் ஒரு புதிய மாற்றம் ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Tags

Next Story