சென்னையில் சுரங்க நடைபாதை-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் மத்திய சதுக்க திட்டத்தின் ஒரு பகுதியான ரூ.34.22 கோடியில் அழகுபடுத்தப்பட்ட சுரங்க நடைபாதையின் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை சென்ட்ரல் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட சுரங்க நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு மரக்கன்றுகளை நட்ட அவர், பேட்டரி காரில் சென்று பார்வையிட்டார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகருகே அமைந்துள்ளதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் காணப்படும். இதன்பொருட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.400 கோடி செலவில் 'சென்ட்ரல் ஸ்கொயர்'(மத்திய சதுக்கம் ) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. சென்னையின் அடையாளத்தை உலக தரத்தில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ள இந்த மத்திய சதுக்கம் திட்டத்தின் கீழ், சென்ட்ரல் பிளாசா என்ற பெயரில் 31 மாடிகளுடன் கூடிய வணிக வளாகம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் பயணியர் விடுதிகள், ஷாப்பிங் மால், பொழுதுபோக்கு பூங்கா, உணவகங்கள் மற்றும் தரைக்கு அடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்தம் என சகல வசதிகளுடன் கட்டமைக்கப்படுகிறது. மேலும் புதிய நடைபாதைகள், கான்கிரீட் பெஞ்சுகள்,மேசைகளுடன் கூடிய இருக்கைகள், இரண்டு பேருந்து நிறுத்தங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் கான்கிரீட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளன.
பயணிகள் எளிதாக செல்வதற்காக லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக தற்போது ரூ.34.22 கோடி செலவில் சென்னை சென்ட்ரல், மெட்ரோ ரயில் நிலையம், ரிப்பன் பில்டிங், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பூங்கா நகர் ரயில் நிலையம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஒரே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதையை அழகுபடுத்தும் விதமாக சதுக்க பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
அதாவது அழகிய செடிகள், நீரூற்றுகள் , 500 கார்கள் மற்றும் 1,500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுரங்கப்பாதை வழியாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்புடன், சிரமமின்றி சாலையை கடக்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதை மற்றும் சதுக்க பூங்காவை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu