சரண் சிங், நரசிம்ம ராவ்,எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது

சரண் சிங், நரசிம்ம ராவ்,எம்.எஸ். சுவாமிநாதனுக்கு விருது
முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்ம ராவ் மற்றும் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா ஆகும். அரசியல், கலை, இலக்கியம் என தங்கள் துறைகளில் அளப்பறிய சாதனைகளை செய்பவர்களுக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவிக்கிறது. அந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்தது. அதேபோல், கடந்த 4 -ம் தேதி பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி.வி நரசிம்ம ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ் சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் சரண் சிங் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். இந்தியாவின் 7-வது பிரதமராக சரண் சிங் பதவி வகித்தார். மிகவும் குறுகிய காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர் சரண்சிங் தான். சுமார் 7 மாதங்கள் மட்டுமே அவர் பிரதமராக இருந்தார். சரண் சிங் கடந்த 1987 அன்று மரணமடைந்தார். இந்தியாவின் 9-வது பிரதமராக பி.வி நரசிம்ம ராவ் பணியாற்றினார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நரசிம்ம ராவ், பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்பட்டார். 1991-96 வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தென் இந்தியாவை சேர்ந்த முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. பிவி நரசிம்ம ராவ் கடந்த 2004 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் 1925 ஆகஸ்ட் 7-ம் தேதி கும்பகோணத்தில் பிறந்தார்.திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் படித்த எம்.எஸ்.சுவாமிநாதன் , கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்சி. விவசாயப் பட்டமும், டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மரபணுப் பயிர்கள் பாடத்தில் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார். தொடர்ந்து, அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றார். மேலும், வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் 1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டபோது, பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தினார். மத்திய வேளாண் அமைச்சக செயலர், மத்திய திட்டக்குழு உறுப்பினர், தேசிய விவசாயிகள் ஆணையத் தலைவர், உணவுப் பாதுகாப்புக்கான உலக குழுவின் உயர்நிலை நிபுணர் குழுத் தலைவர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ராஜ்ய சபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.எஸ் சுவாமிநாதன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story