சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி
சென்னை மெரினா கடலில் அமைக்கப்பட உள்ள கருணாநிதி பேனா நினைவு சின்னம் மாதிரி படம்.
கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
தி.மு.க. தலைவராகவும், ஐந்து முறை தமிழக முதல்வராகவும் இருந்தவர் மு. கருணாநிதி. தமிழின தலைவர் என அழைக்கப்படும் இவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழிக்கும் தனது எழுத்து பேச்சு மூலம் நிறைய சேவைகள் செய்து உள்ளார். மேலும் தொல்காப்பியம், சங்க தமிழ் உள்பட அவர் எழுதிய பல நூல்கள் தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பறை சாற்றி வருகிறது.
கருணாநிதி மரணம் அடைந்ததும் அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதி நினைவிடமாக வணங்கப்பட்டு வருகிறது. கருணாநிதி நினைவிடம் அருகே சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கருணாநிதியின் எழுத்து வன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக பேனா நினைவு சின்னம் அமைக்கப்படும் என தற்போதைய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ரூ.80 கோடியில் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அதே நேரத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வந்தன. இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதாத பேனாவிற்கு ரூ.80கோடி மக்கள் பணத்தை வீணடிப்பதா? பேனா நினைவு சின்னம் கடலுக்கு நடுவில் அமைக்கப்பட்டால் நான் உடைத்தெறிவேன் என கருத்து கேட்பு கூட்டத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் தமிழக அரசின் சார்பில் கடலில் பேனா சின்னம் நினைவு சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசின் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது கருணாநிதி பேனா நினைவு சின்னத்துக்கு மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் விண்ணப்பத்தை ஏற்று மத்தியஅரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் ஏற்கனவே வழங்கிய நிலையில், தற்போது கடலோர ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.
15 நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu