ஆணி வேரை கூட தொட முடியாது: அண்ணாமலைக்கு திருப்பூர் தி.மு.க. பதிலடி

ஆணி வேரை கூட தொட முடியாது: அண்ணாமலைக்கு திருப்பூர் தி.மு.க. பதிலடி
X

திருப்பூரில் தி.மு.க. அரசின் இரண்டாண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆணி வேரை கூட தொட முடியாது என அண்ணாமலைக்கு திருப்பூர் தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம் கொண்டரசம்பாளையம் கிராமத்தில் ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் திராவிட மாடல் ஆட்சியின் 2-வது சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய குழு தலைவருமான எஸ். வி. செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணிவாசகம் வரவேற்புரையாற்றினார் .

கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் தாரை சிவா, திருப்பூர் சந்துரு ஆகியோர் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினர். கூட்டத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன் பேசியதாவது:-

தேர்தல் வாக்குறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அத்தனை திட்டங்களிலும் 87 சதவீத திட்டங்கள் முற்றிலுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன .குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரியில் படித்து வரும் 2.20 லட்சம் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1937 அரசு பள்ளிகளில் 1.48 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 39.21 லட்சம் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் பயணித்து சராசரியாக மாதம் ரூ.888 பணத்தை மிச்சப்படுத்தி வருகிறார்கள். இதுபோன்று ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினசரி பொய்களை கூறி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் . தலைவர் கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களும் உயர வேண்டும். பதவி உயர்வு பெற வேண்டும். அரசு பதவிகளில் வகிக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் சட்டத்தை இயற்றியதால் தான் அண்ணாமலை கூட இன்று ஐ.பி.எஸ்.ஆக பணியாற்ற முடிந்தது. அண்ணாமலையின் சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். தி.மு.க. பனங்காட்டு நரி. கடந்த 50 ஆண்டுகளில் உங்களை போன்ற எத்தனையோ வேடதாரிகளை கழக அரசு சந்தித்துள்ளது. தி.மு.க. வளர்ந்து பரந்த ஆலமரம். இதன் ஆணிவேரை கூட உங்களால் தொட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பேசினார். கூட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம் ,மாவட்ட துணைச்செயலாளர் பிரபாவதி ,பெரியசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் இளைஞர் அணி நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture