ஒற்றை தலைமை கோரி அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் கோஷம்
ஒற்றை தலைமை வேண்டும் என அதிமுக அலுவலகத்தில் கோஷம் எழுப்பிய தொண்டர்கள்
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை , வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தற்காலிக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.
இதற்காக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் குறித்து 14ம் தேதி கட்சியின் தலைமை அலுவகத்தில் ஆலோசனை நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடர்பான ஆலோசிப்பதற்கான கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீா்மானங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த தொண்டர்கள் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் , ஓ.பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என முழக்கமிட்டனர்.
அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் வெளியே கோஷம் எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu