கேரளத்தில் கணக்கைத் துவங்கிய பாஜக..!
மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் தனது கணக்கை துவங்கியுள்ளது பாரதீய ஜனதா கட்சி. கேரளத்தின் திரிச்சூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை நோக்கி நகர்ந்து வருகிறார் சுரேஷ் கோபி.
கேரள மாநிலம் திரிச்சூர் தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள நடிகர் சுரேஷ் கோபி தற்போது வெற்றிக் கனியை பறித்துள்ளார். அவர் மொத்தமாக 4 லட்சத்து 12 ஆயிரத்து 338 வாக்குகளைப் பெற்றுள்ளார். இதனால் கேரளத்தில் தாமரை மலர்ந்துள்ளது.
சுரேஷ் கோபி ஏற்கனவே 2019 மக்களவைத் தேர்தலிலும் 2021 சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர். மக்களவைத் தேர்தலில் 17 சதவிகித வாக்குகளைப் பிரித்தார். மேலும் சட்டமன்ற தேர்தலில் 11.8 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தார். இதனால் அவர் பலம் வாய்ந்த போட்டியாளராக கருதப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். ஆனால் இருவரையும் எளிதில் வீழ்த்தி இவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில்குமாரைக் காட்டிலும் சுமார் 74,686 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். அவர் 3 லட்சத்து 37 ஆயிரத்து 652 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் 3 லட்சத்து 28 ஆயிரத்து 124 வாக்குகளைப் பெற்றுள்ளார். காங்கிரஸும் கம்யூனிஸ்ட்டும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 6 லட்சத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu