அயோத்தி ராமர் கோவில் திறப்பால் தேர்தலில் பா.ஜ.விற்கு 400 சீட் கிடைக்குமாம்

அயோத்தி ராமர் கோவில் திறப்பால் தேர்தலில் பா.ஜ.விற்கு 400 சீட் கிடைக்குமாம்
X
அயோத்தி ராமர் கோவில் திறப்பால் தேர்தலில் பா.ஜ.விற்கு 400 சீட் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.க.வின் பல ஆண்டு கால கனவை நிறைவேற்றி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாடு முழுவதும் ஒரு அரசு விழாவைப் போல ஒளிபரப்பு செய்யப்பட்டு, பா.ஜ.க.வின் செல்வாக்கை உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக, வட இந்தியாவில். இது தனியார் நிகழ்ச்சி போல் இல்லை. அரசியல் விழாபோல் தான் உள்ளது என எதிர்க்கட்சிகள் கருத்து கூறிவருகின்றனர்.

வழக்கம்போல் பாஜக, எதிர்க்கட்சிகளின் குரலுக்கு எந்தவிதமான மதிப்பையும் வழங்கப் போவதில்லை. அவர்களின் இலக்கை அடையும் வரை, இந்த விவாதங்களுக்குப் பிரதமர் பதிலளிக்கப் போவதில்லை. ஏனெனில் எதிர்க்கட்சிகள் நிலை நாட்டில் பலவீனமாகவே உள்ளது.

யார் என்ன சொன்னாலும் நீண்ட கால வாக்குறுதியை பாஜக செய்து முடித்துள்ளது. ஆகவே, அந்தக் கட்சியின் தொண்டர்களைத் தாண்டி, வடநாட்டில் உள்ள ராம பக்தர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்த உற்சாகத்தை வைத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களைப் பிடிக்க பாஜக முடிவு செய்துள்ளது. அதாவது இந்த நிகழ்வானது ஐம்பது சதவீத வாக்குகளைப் பெறுவதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாகத் தேர்தல் வியூகர்கள் கணித்துவருகின்றார்கள்.

பா.ஜ.க. நினைப்பதைப்போல் 50 சதவீத வாக்குகளைப் பெறுவது என்பது சாதாரணமானதல்ல. மக்களவைத் தேர்தலில் 400க்கும் அதிகமான இடங்களை வெல்வதும் சாதாரணமான இலக்கு அல்ல. அதை பா.ஜ.க. உணராமல் இல்லை. அவர்கள் அதைத் தைரியமாக நம்புவதற்குக் காரணம், அக்கட்சி பலமாக உள்ளது என்பதல்ல. காங்கிரஸ் கட்சி உட்பட இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக உள்ளன என்பதால்தான். ஆகவேதான் 400 இடங்களைத் தாண்டி இலக்கை நிர்ணயித்துள்ளது பாஜக. இந்தளவுக்கு இடங்களை எந்தக் கட்சியும் பெற்றதில்லை. அதுவே வரலாறு.

அதாவது 1984 இல் ஒரே ஒருமுறைதான் காங்கிரஸ் 400 இடங்களைத் தாண்டியது. அதுவும் இயற்கையாக நடந்த வெற்றியல்ல. அப்போது இந்திரா காந்தியின் படுகொலை நாட்டையே உலுக்கியது. அதில் உருவான அனுதாப அலையின் விளைவாகக் காங்கிரஸ் இந்த உயரத்திற்குச் சென்றது. அத்தேர்தலில் காங்கிரஸ் தனது தனிப்பட்ட சாதனையாக 48.1% வாக்குகளைப் பெற்றது. அதற்கு ஒரே காரணம், அனுதாப அலை.

சொல்லப்போனால் இப்போது வரை பாஜக நாடு முழுவதும் உள்ள ஒரு பெரும் கட்சியல்ல. பல அரசியல் விமர்சகர்கள், தேர்தல் வியூக நிபுணர்கள், எதிர்க்கட்சிகள்கூட பாஜகவை வட இந்தியக் கட்சியாகவே எடைபோடுகிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 303 இடங்களில் பா.ஜ.க. வென்றது. அதாவது 223 இடங்களைக் கொண்ட முதல் எட்டு மாநிலங்களில், வடக்கில் மூன்று, கிழக்கிலிருந்து இரண்டு, மேற்கிலிருந்து இரண்டு, தெற்கிலிருந்து ஒன்றை மட்டுமே பா.ஜ.க. வென்றது. விளக்கமாகச் சொன்னால் மேலே குறிப்பிட்ட இந்த மாநில பட்டியல்களில் உள்ள உத்தரப் பிரதேசம் (62), மத்தியப் பிரதேசம் (28), குஜராத் (26), கர்நாடகா (25), ராஜஸ்தான் (24) மகாராஷ்டிரா (23), மேற்கு வங்கம் (18) பீகார் (17) ஆகியவை அடங்கும். அடுத்ததாக வடகிழக்கில் உள்ள 25 இடங்களில் கூட்டணிக் கட்சிகள் வென்றவை தவிர. 14 இடங்களை பாஜக வென்றது. பீகார் மற்றும் ஜார்கண்ட் ஆகிய கிழக்கு மாநிலங்களை உள்ளடக்கிய இந்தி பெல்ட்டில் மொத்தம் உள்ள 225 இடங்களில், பாஜக 178 இடங்களில் வெற்றி பெற்றது. அதேபோல் உத்தரப்பிரதேசத்தில், அது 62/80 இடங்களை வென்றது. மேலும் 2019 முதல் சமாஜ்வாதி கட்சி-பிஎஸ்பி-ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய பலவீனமடைந்த கூட்டணியை பாஜக எதிர்கொள்கிறது. ETG இன் வெளியிட்டுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி, இங்கே பாஜகவுக்கு 8 முதல் 12 இடங்கள் வரை கூடுதலாகக் கிடைக்கும் என்றுதெரியவந்துள்ளது. பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) உடனான கூட்டணியில் பாஜக வெறும் 17 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றது. இப்போது நிதிஷ்குமாரின் கட்சி கூட்டணியிலிருந்து விலகியதால், பாஜக 30க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது.

நடைபெற உள்ள 2024 தேர்தலில் பா.ஜ.க. கூடுதலான இடங்களில் போட்டியிடும் வாய்ப்பை அளித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில், பாஜக மொத்தம் 435 இடங்களில் போட்டியிட்டது. அது இந்த முறை 475-500 வரை உயரலாம் என்கிறார்கள் தேர்தல் வியூகம் வகுப்பவர்கள். இதன் மூலம் கட்சியின் வாக்கு சதவீதம் நாடு முழுக்க அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாக்கு சதவீதத்துடன் வேட்பாளர் எண்ணிக்கையும் இது அக்கட்சிக்கும் வழங்கும் என்றே சொல்லலாம். மேலும் இந்த முறை கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) உடனான பாஜக கூட்டணி, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து முன்பைவிட பாஜகவுக்குக் கூடுதல் இடங்களைப் பெற்றுத் தரும் என்று தேர்தல் நிபுணர்கள் சொல்கிறார்கள். கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 72 இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இதில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 21, பிஎஸ்பி 10, சமாஜ்வாதி கட்சி 5, பிஜேடி 11, பிறர் 10 இடங்களிலும் வெற்றி பெற்றனர். இந்த 72 இடங்கள் எவை என்றால், அஸாம் (1), சத்தீஸ்கர் (2), கோவா (1), ஜார்கண்ட் (2), கர்நாடகா (2), மணிப்பூர் (1), கேரளா (1), மகாராஷ்டிரா (2), மத்தியப் பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களுக்கு உள்ளான வருகின்றன. ஒடிசா (11), பஞ்சாப் (1), தமிழ்நாடு (5), தெலுங்கானா (2), உத்தரப் பிரதேசம் (16), யூனியன் பிரதேசங்கள் (2) மற்றும் மேற்கு வங்கம் (22) ஆகியவை அடங்கும். இதில் 17 இடங்களில் பாஜக 5%க்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இன்னும் விளக்கிச் சொன்னால் 15 இடங்களில் அக்கட்சி 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இவற்றில் 71 தொகுதிகளில் (மணிப்பூர் நீங்கலாக) பாஜகவுக்கு ஆதரவாக 10% வீதம் வாக்குகள் கிடைக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது பாஜகவுக்கு 5% வாக்குகள் அதிகரிக்கும் முன்பு வெற்றி பெற்ற கட்சியின் வாக்குகளின் பங்கில் அது 5% சரிவை ஏற்படுத்தலாம் என்கிறா

இதனால் கூடுதலாக இந்த 2024இல் 38 இடங்களை பாஜக பெறக்கூடும். ஆளும் கட்சியான பாஜக 341 இடங்கள்வரை வெற்றி நோக்கித் தள்ளப்படலாம். இந்தக் கருத்துக் கணிப்புகளின்படி பாஜக தனது பழைய 303 எண்ணிக்கையை எளிமை யாக எட்டிவிடலாம் என நம்புகிறது. அதற்கு ராமர் கோயில்தான் வழி ஏற்படுத்தித் தந்துள்ளது. அப்படி என்றால் பழைய இடங்களை விட பாஜகவுக்கு இந்தக் கூடுதலான 38 இடங்கள் எங்குக் கிடைக்கும்?

அசாம் (1), சத்தீஸ்கர் (2), கோவா (1), ஜார்கண்ட் (2), கேரளா (1), மகாராஷ்டிரா (1), மத்தியப் பிரதேசம் (1), ஒடிசா (6), தெலுங்கானா ( 1), உத்தரப் பிரதேசம் (8), யூனியன் பிரதேசங்கள் (2) மேற்கு வங்கம் (12) ஆகிய மாநிலங்களிலிருந்துதான் அந்த இடங்களை பாஜக பெற உள்ளதாகக் கருத்து கூறுகிறார்கள் தேர்தல் நேர நிபுணர்கள். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடியை ஆதரிக்கும் வாக்காளர்கள் நரேந்திர மோடிக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜக நம்புகிறது. 2019ல் ஒடிசாவில் பிஜேடி 12 இடங்களையும், பிஜேபி 8 இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தையும் வென்றன. மூன்று இடங்களில், பிஜேபி 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கு இடையேயான கூட்டணி தொகுதிப் பங்கீடு குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அடுத்து இந்தியா கூட்டணியிலிருந்து இடதுசாரிக் கட்சிகள் வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.இந்தப் போக்குகள் பாஜகவைப் பலமடையை வைக்கும் என்கிறார்கள் அக்கட்சியின் ஆதரவாளர்கள்.

ஆகவே, இப்போதைய அரசியல் கணிப்பாளர்களின் கணக்குப்படி பாஜக 370 இடங்கள் வரை உயரக்கூடும். அது 400 ஐ தாண்டுவதற்குக் கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் வலிமையான கூட்டணிக்கட்சிகளை அரவணைக்க வேண்டும். நவீன் பட்நாயக்கின் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டி கட்சி ஆகியவை கடந்தகால மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. அவை மூலம் இந்த முறை பாஜக தன் செல்வாக்கைக் கூட்டிக் கொள்ள முயற்சிக்கும். பா.ஜ.க.வின் இந்த இலக்கு சாத்தியமாகுமா? அதற்கு விடை கிடைக்கவேண்டும் என்றால் அரசியல் விளையாட்டில் கடைசி நேரம் வரை காத்திருக்கவேண்டும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!