கர்நாடகாவில் கோட்டை விட்ட பா.ஜ.க: ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சிகள்
பிரதமர் மோடி.
கர்நாடக மாநில தேர்தலில் பா.ஜ.க. கோட்டை விட்டதால் முதல்வர் பதவியேற்பு விழாவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து காய் நகர்த்தத் தொடங்கியுள்ளன.
நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அம் மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்று உள்ளார். பொதுவாக கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை ஆட்சிகள் மாறி மாறி தான் வந்து கொண்டிருக்கின்றன. அங்கு மாநில கட்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அகில இந்திய கட்சிக்கும் கொடுப்பது அம்மாநில மக்களின் வழக்கம். பெரும்பாலான தேர்தலில் அங்கு தேர்தல் முடிவு என்பது அறுதி பெரும்பான்மைக்கும் குறைவாகவே தேர்தல் முடிவு வெளிவந்துள்ளது.
இதன் காரணமாக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி அடிக்கடி முதலமைச்சர்களை மாற்றக் கூடிய ஒரு நிலை தான் ஏற்பட்டது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக 103 தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும் அறுதி பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் ஆட்சி அமைக்க முன்வரவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி கவுடா முதலமைச்சரானார். பின்னர் கூட்டணி முறிவின் காரணமாக அவர் பதவி இழக்க நேரிட்டது.
இதன் காரணமாக பின்னர் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதலமைச்சரானார். அவருக்கு கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். இப்படி அந்த மாநிலத்தை பொறுத்தவரை அடிக்கடி முதலமைச்சர்கள் மாற்றப்பட்டு வந்ததற்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் போனதே காரணமாகும்.
இதன் காரணமாக அந்த மாநிலத்தின் ஸ்திரத்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனை நன்கு உணர்ந்த அம்மாநில மக்கள் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு அறுதி பெரும்பான்மை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறார்கள். இது சாதாரண தீர்ப்பு அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்ல. இது ஒரு மாநிலத்தின் வெற்றி என்று எளிதாக பாரதிய ஜனதா கட்சி கருதி விடவும் முடியாது .
தேர்தலுக்கு முன்பாகவே கர்நாடகா தேர்தல் களத்தில் நிலைமை மத்திய உளவுத்துறை மூலமாக பிரதமர் மோடிக்கு கிடைத்தது. அதில் மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைப்பது என்பது முடியாத காரியம் என்பது தெளிவாக இருந்ததன் காரணமாகத்தான் பிரதமர் மோடி தனிக் கவனம் செலுத்தி 16 முறை மாநிலத்தில் பிரச்சாரம் செய்தார்.
ஆனாலும் அந்த பிரச்சாரம் மக்கள் மனதை மாற்ற முடியவில்லை. தெளிவான முடிவெடுத்த மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்து விட்டார்கள். ஒரு வகையில் இந்த வெற்றி பா.ஜ.க. கோட்டையில் ஓட்டை விழுந்ததாகவே கருதப்படுகிறது. பா.ஜ.க.விட்ட இந்த கோட்டயால் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்குபாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இமேஜை அரசியல் நோக்கர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது.
இனி சமூக வலைத்தளங்களும் ஊடகங்களும் மெதுவாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுக்க தொடங்கி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த தேர்தல் வெற்றியை ஒரு அச்சாரமாக வைத்துக்கொண்டு அரசியல் நோக்கர்களுக்கு கதை கட்டுரை எழுதக்கூடிய வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டது .அந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சிக்குள் நிலவி வரும் கோஷ்டி பூசல் தான் காரணம் என்பதில் ஐயமில்லை.
எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு எதிராக இப்போதே வரிந்து கட்ட தொடங்கி விட்டார்கள் என்று தான் கருத வேண்டும். காரணம் கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா பதவியேற்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். இவர் ஏற்கனவே அகில இந்திய அளவில் பாரதிய ஜனதாவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளார் அதேபோல நிதீஷ் குமார், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாஆகியோரும் பங்கேற்று உள்ளனர். ராகுல் காந்தியும் இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். கர்நாடகத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதாக அமைந்துள்ளது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu