தமிழக நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் பா.ஜ.விற்கு இரண்டாவது இடம்

தமிழக நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் பா.ஜ.விற்கு இரண்டாவது இடம்
தமிழக நாடாளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் பா.ஜ.விற்கு இரண்டாவது இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 2024க்கான பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. நேற்றுதான் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. பிப்ரவரி 3,4ஆம் தேதிகளில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இன்னொரு பக்கம் அதிமுகவும் இன்று முதல் கூட்டணி ஆலோசனைகளை நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக ஆலோசனை செய்து வருகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்து வருகிறது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்து வருகின்றனர். இந்த நிலையில்தான் பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது. பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.

மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2 டூ3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

சாணக்யா செய்தி சேனல் சார்பாக இந்த கருத்து கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. மக்களவைத் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? என்று இதில் கேட்கப்பட்டு உள்ளது. அதில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 32 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 21 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று 22 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். இதில் அதிமுகவை விட பாஜக ஒரு சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அதிமுக மூன்றாவது இடத்திற்கு செல்லும் என்று இந்த கருத்து கணிப்பு தெரிகிறது. அதே சமயம் திமுக மீண்டும் லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெறும் என்று கணிப்பு தெரிவிக்கின்றன. அதிமுகவிற்கு எச்சரிக்கை மணியாக இந்த கருத்து கணிப்பு முடிவுகள் மாறி உள்ளன.

Tags

Next Story