தமிழக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் மூன்றாவது அணி அமைவது உறுதி
தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைவது உறுதியாகி உள்ளது .
நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை திமுக, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. நேற்று தான் திமுக - காங்கிரஸ் இடையிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. பிப்ரவரி 3,4ஆம் தேதிகளில் கூட்டணி கட்சியில் உள்ள மற்ற கட்சிகளுடன் தி.மு.க. ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. கட்சிகளுடன் தி.மு.க. கூட்டணி குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார். குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வும் இன்று முதல் கூட்டணி ஆலோசனைகளை நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலில் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனை செய்து வருகிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை செய்து வருகிறது. கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பா.ஜ.க. மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பா.ஜ.க + ஓ. பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி ஏற்கனவே பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என்பதில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது. அ.தி.மு.க. - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், இனிமேல் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது. பா.ஜ.க. கூட்டணி என்பது இனி நடக்காது. 2024 லோக்சபா தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் கூட்டணி வைக்க மாட்டோம். எங்கள் கூட்டணி மொத்தமாக முறிந்துவிட்டது. இஸ்லாமியர்கள் எதிர்பார்த்தது போல இந்த கூட்டணி முறிந்துவிட்டது. இந்த கூட்டணியை நாங்கள் முறிக்கவில்லை. எங்கள் தொண்டர்கள்தான் முறித்தனர். இந்த கூட்டணி முறிவதற்கு காரணம் எங்கள் தொண்டர்களின் கோரிக்கைதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று கூட்டணியை முறித்து உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார்.
அதேபோல் 2024 லோக்சபா தேர்தல் புதிய கூட்டணி அமைப்போம் என்றும் கூறியுள்ளார். அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். அந்த வகையில்தான் புதிய கூட்டணி அமைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறாராம். அதன் ஒரு கட்டமாக பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு ரகசியமாக போன் செய்து பேசி வருகிறாராம். பாஜகவிற்கு வேறு வழியில்லை; இந்த நிலையில் பாஜகவிற்கு அதிமுகவுடன் இணையும் வழி இல்லை என்பதால் பாஜக மூன்றாவது கூட்டணியை சோதனை முயற்சியாக தமிழ்நாட்டில் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 5ம் தேதி முதல் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu