பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனங்களில் வந்து வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த பெரம்பூர் செம்பியம் பகுதியில் சடையப்பன் தெருவில் உள்ள தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். அவருடன் மேலும் இருவரும் நின்று கொண்டிருந்துள்ளனர்.
இன்று இரவு 7.30 மணியளவில் அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் அந்த 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர். மேலும், அருகில் இருந்த 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் ஆம்ஸ்ராங் சரிந்த நிலையில், அந்த கும்பல், தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் அங்கிருந்து தப்பியுள்ளது.
இதனையடுத்து, படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் உடனடியாக சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த படுகொலைச் சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆம்ஸ்டாங்க் உடன் இருந்த இரண்டு பேருக்கும் வெட்டு விழுந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தலைநகர் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. சில ரவுடி கும்பல்கள் உடன் இவருக்கு முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தப் படுகொலை சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் முன் விரோதம் உள்ளதா? வேறு ஏதேனும் காரணமா? அரசியல் கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் சேலம், கடலூரில் அதிமுக பிரமுகர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், தலைநகர் சென்னையிலேயே, முக்கியமான அரசியல் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் தமிழ்நாட்டை அதிர வைத்துள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக பெரம்பூர் செம்பியம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி உள்பட எதிர்க்கட்சி தலைவர்களால் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு சம்பவத்திற்கு பின்னர் எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி நடுநிலையான கட்சிகளும் திமுக அரசை விமர்சிக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தான்தற்போது தலைநகர் சென்னையில் முக்கிய அரசியல் கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu