"கோவை சம்பவம் தொடர்பாக எனக்கு சம்மன் அனுப்ப தயாரா"-அண்ணாமலை சவால்
அண்ணாமலை.
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி ஒரு கார் திடீர் என்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது.இதில் காரில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) உடல் கருகி உயிரிழந்தார்.கார் வெடித்த இடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், ஆணிகள், கோலிக்குண்டுகள்,பால்ரஸ் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் இறந்த ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கை இப்போது மத்திய அரசின் என்.ஐ.ஏ. என்று அமைக்கப்டும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தமிழக அரசு மீது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். அவருக்கு தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:- " கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சில அமைச்சர்களும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரும் சொல்லி உள்ளனர்.என்னிடம் என்.ஐ.ஏ. விசாரித்தால், அவர்களிடம் என்னிடம் உள்ள ஆவணங்களை கொடுப்பேன். அதனை எனக்கு எந்த அதிகாரி கொடுத்தார். அவர் என்னிடம், 'தமிழக அதிகாரிகளின் மீது நம்பிக்கை இல்லை, நீங்கள்தான் இதை சரியாக செய்வீர்கள்' என்று சொல்லி, எனக்கு செல்போன் வாட்ஸ் மூலம் அனுப்பினார் என்ற விவரத்தையும் தெரிவிப்பேன். அந்தஅதிகாரியின் பெயரை சொல்ல மாட்டேன்.
கோவை சம்பவம் பற்றி 18-ம் தேதியே மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. மத்திய அரசு அனுப்பிய எச்சரிக்கை தகவலை வைத்துக்கொண்டு 4 நாட்கள் ஏன் தமிழக அதிகாரிகள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். இந்த சம்பவத்தில் பல உயர் அதிகாரிகளின் பதவி பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அந்த உயர் அதிகாரிகளுக்கு தி.மு.க.வின் அமைச்சர்கள் நிர்பந்தம் கொடுத்தார்களா? என்பதையும் பார்க்க வேண்டும். கோவை போலீஸ் கமிஷனர் இரண்டு நாட்களாக இந்த பிரச்சனை பற்றி எதுவும் கூறுவில்லை. கோவையின் பொறுப்பு அமைச்சர் மட்டும் இந்த சம்பவத்தை சிலிண்டர் விபத்து என்றே கூறுங்கள் என்று சொன்னரா? என்பது பற்றியும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும். பல உயர் போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பற்றி என்னிடம் உள்ள ஆவணங்களை வெளியிட்டால் பெரிய பூகம்பம் வெடிக்கும். இப்போதும் சவால் விடுகிறேன்.தைரியம் இருந்தால் எனக்கு சம்மன் அனுப்புங்கள்,அப்போது தமிழக அரசிடமே அந்த ஆவணங்களை கொடுக்கிறேன். உங்களிடம் ஆவணங்களை கொடுத்தபிறகு, அதை பொதுவெளியிலும் வெளியிடுவோம். கோவையில் இது போன்ற சம்பவம் நடக்கலாம் என்பது பற்றி மத்திய அரசு 4 நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக சட்டமன்றக் குழு அமைத்து விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதை செய்ய அரசு ஒப்புக்கொண்டால் என்னிடம் உள்ள ஆதாரங்களை கொடுக்கிறேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu