தமிழகத்தில் மோடி நிகழ்ச்சியில் அண்ணாமலை ‘மிஸ்ஸிங்’: காரணம் என்ன?
பிரதமரை வரவேற்கும் அண்ணாமலை - கோப்புப்படம்
ஹைதராபாத்தில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் இன்று சென்னை வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, அமைச்சர்கள், பாஜக, அதிமுக நிர்வாகிகள் என பலரும் வரவேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
கடந்த காலங்களில் பிரதமர் மோடி சென்னை வரும்போதெல்லாம் அண்ணாமலை முதல் ஆளாக நிற்பார். அண்மையில் பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தபோது பிரதமருடன் சுமார் 1 மணி நேரம் காரிலும் பயணித்தார் அண்ணாமலை. ஆனால் இன்று பிரதமர் மோடியை வரவேற்க அண்ணாமலை வரவில்லை.
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையம் திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்தடைந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது டெல்லியில் இருக்கிறார். கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பதால், கடந்த சில நாட்களாக, கர்நாடகாவில் இருக்கிறாராம். இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார்.
வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, கர்நாடகா தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் அண்ணாமலை. அதனால், தற்போது பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையின்போது அண்ணாமலையால் வர முடியவில்லையாம்.
நாளை பிரதமர் மோடி நீலகிரி செல்லவிருக்கிறார். அங்கு ஆஸ்கர் விருது பெற்ற "The Elephant Whisperors' ஆவணப் படத்தின் பொம்மன் - பெள்ளி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் இருந்து இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு திரும்பினால், பிரதமர் மோடியை நீலகிரியில் சந்திக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.
அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அண்ணாமலை சந்திக்கவில்லை. அதன் பிறகு வந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் வரவேற்கவோ, அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளுக்கோ அண்ணாமலை செல்லவில்லை. சென்னை விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன் டெல்லி புறப்படுவதற்கு சற்று முன்பாகத்தான் அவரைச் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu