அண்ணாமலை மாற்றம்: மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக போடும் திட்டம்

அண்ணாமலை மாற்றம்: மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக போடும் திட்டம்
X

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றி விட்டு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணிக்கு பாஜக போடும் திட்டம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் செய்யப்பட உள்ளார். அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கு பாஜக திட்டமிட்டு உள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுகவுக்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் இருந்தும் எதிர்க்கட்சிகளால் அந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரிக்க முடியவில்லை. இதற்கு காரணம் அதிமுக பாஜக கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியாக நின்றதால் திமுக எதிர்ப்பு ஓட்டுகள் அனைத்தும் சிதறி போனதால் திமுக எளிதாக வெற்றி வாகை சூடியது. அதிமுக மற்றும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்களை கூட்டி பார்த்தால் பல தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்களை விட அதிகமாக இருந்தது.

இந்த கணக்குகளை இரு கட்சிகளும் கூட்டி கழித்து பார்த்து ஒரு முடிவிற்கு வந்துள்ளன. அந்த முடிவு என்ன என்றால் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது என்பது தான். அதற்கான பேச்சுவார்த்தைகள் இரு கட்சிகள் சார்பிலும் ரகசியமாக நடந்து வருகிறது.

பாஜகவுடன் மீண்டும் கூட்டணிஏற்படுத்தி சட்டமன்ற தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு உடன்பாடு இல்லை என்றாலும் தொடர் தோல்விகளை சந்தித்து பரிதாப நிலையில் உள்ள அதிமுகவின் வாக்கு வங்கியை தக்க வைத்து மீண்டும் கட்சியை வெற்றிப்பாதையில் அழைத்து செல்வதற்கு இது ஒன்று தான் ஒரே வழி என்று கட்சியின் முன்னணி தலைவர்கள் அவரிடம் எடுத்துக்கூறி வருவதால் அவரும் வேறு வழியில்லாமல் தலையை அசைத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி விரும்பிய படி ஒற்றை தலைமையை அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தோம். ஆனால் அதை அவர் தேர்தல் நேரத்தில் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. கூட்டணி விவகாரத்தில் அவர் சரியான நிலைப்பாடு எடுக்காமல் போனது தான் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என அதிமுக நிர்வாகிகள் மட்டத்தில் பரவலாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. சில மாவட்ட செயலாளர்கள் இதனை எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டு வந்திருக்கிறார்கள்.

மேலும் கட்சியை காப்பாற்றவேண்டும் என்பதற்காக ஓ பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் சமாதானத்திற்கு தூதுவிட்டும் எடப்பாடி பழனிசாமி அதனை புறக்கணித்து விட்டதும் தொண்டர்கள் மத்தியில் அவர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் காதிற்கு வந்துவிட்டது ஆனாலும் அவர் விடாப்படியாக சசிகலாவையோ ஓ பன்னீர் செல்வத்தையோ அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார். இந்த முடிவின் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்து உள்ளது என்பது அவருக்கு தெரியும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிமுக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது இந்த அதிருப்தி தொண்டர்களின் கோபமாக மாறி கட்சி மீண்டும் பிளவு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அதிமுக முன்னணி தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தமிழகத்தில் தனியாக நின்று சாதிக்க முடியாது என்பதால் மீண்டும் அதிமுகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பயணிக்கலாம் என முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக சில திட்டங்களை பாரதிய ஜனதா வகுத்துள்ளது.

அதில் முதல் திட்டம் தமிழக பாரதிய ஜனதா தலைவராக உள்ள அண்ணாமலை இ பி எஸ் ஐ மாற்றி விட்டு அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் இவர்களில் யாராவது ஒருவரை போடலாம் என முடிவு செய்திருப்பதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் கூறுகின்றன.

அண்ணாமலையால் தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்து உள்ளது.பேசப்படும் கட்சியாக மாறி உள்ளது என்றாலும் அதிமுக தரப்பில் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலைையை மாற்றியே தீர வேண்டும் என அவர்கள் உறுதியாக கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் அண்ணாமலையின் கடந்த கால பேச்சுக்கள் தான். அதாவது அண்ணா மற்றும் ஜெயலலிதா பற்றி அவர் பேசிய பேச்சுகளால் தான் அதிமுக பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டது என்பது பிஜேபிக்கும் தெரியும்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் திமுகவிற்கு எதிரான மக்கள் மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள்.அதனை சட்டமன்ற தேர்தலில் அறுவடையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக இருப்பதால் தான் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக மீண்டும் பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் நெருங்கி வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

பிளவு பட்ட அதிமுக ஒன்றிணைய வாய்ப்புகள் இல்லை என்றாலும் பிஜேபி கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஏற்கனவே இருப்பதால் பிஜேபிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ தமிழகத்தில் அடுத்து நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக கால் பதிக்க வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக இருப்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!