பாமக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: தலைவரானதும் அன்புமணி அதிரடி

பாமக மாவட்ட செயலாளர்கள் நீக்கம்: தலைவரானதும் அன்புமணி அதிரடி
X

அன்புமணி ராமதாஸ்.

பா.ம.க. தலைவராக அன்புமணி பொறுப்பேற்ற நிலையில், அதிரடியாக இரண்டு மாவட்டச்செயலாளர்கள் பதவி நீக்கம் செய்துள்ளது, கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாமக நிறுவனராக ராமதாஸ் இருந்து வருகிறார். கட்சித் தலைவராக கோ.க. மணி செயல்பட்டு வந்தார். எதிர்வரும் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், புது ரத்தம் பாய்ச்சும் நடவடிக்கையாக, பா.ம.க.வின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே, சரிவர செயல்படாத நிர்வாகிகள் குறித்து ஆலோசனை நடத்திய அன்புமணி ராமதாஸ், மாவட்ட செயலாளர்கள் இருவரை அதிரடியாக நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக, பாமக தரப்பில் வெளியான அறிக்கையில், வடசென்னை மைய மாவட்டச்செயலாளராக இருந்து வரும் வியாசர்பாடியைச் சேர்ந்த மா.வெங்கடேசப்பெருமாள், அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சியில் உறுப்பினராக மட்டும் இருப்பார்.

தென்சென்னை கிழக்கு பாமக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து, மந்தைவெளி ஸ்ரீராம் ஐயர் நீக்கப்பட்டுள்ளார். இருவரும் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவராக பதவி ஏற்ற சூட்டோடு, இரண்டு பாமக மாவட்டச்செயலாளர்களை அன்புமணி நீக்கி இருப்பது, கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைவு..! விவசாயிகளின் கவலை அதிகரிப்பு..!