சிவகங்கை, நாகை, கன்னியாகுமரி தொகுதிகளில் அமித்ஷா தேர்தல் பிரச்சாரம்
மத்திய அமைச்சர் அமித்ஷா.
வரும் லோக்சபா தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகை தர உள்ளார். நாளை சிவகங்கை, மதுரையில் வாகன பேரணி நடத்தும் அமித்ஷா மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார். அதன்பிறகு நாளை மறுநாள் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், தென்காசியில் அமித்ஷா பாஜகவேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் தான் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னையில் வாகன பேரணி நடத்தினர். அதன்பிறகு நேற்று வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகை தர உள்ளார். கடந்த 4 மற்றும் 5 தேதிகளில் தமிழகம் வருவதாக அமித்ஷா அறிவித்து இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தான் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் தமிழகத்தில் அமித்ஷா தீவிர பிரசாரம் செய்கிறார். மொத்தம் 5 தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
அதன்படி நாளை மதியம் 3.05 மணிக்கு விமானத்தில் அமித்ஷா மதுரை விமான நிலையத்தில் வந்திறங்க உள்ளார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்கின்றனர். அதன்பிறகு அங்கிருந்து 3.50 மணிக்கு சிவகங்கை செல்கிறார். அங்கு பாஜக கூட்டணி வேட்பாளராக இமகமுக தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணி நடத்துகிறார். இந்த வாகன பேரணி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடைபெற உள்ளது.
அதன்பிறகு சிவகங்கையில் இருந்து மதுரைக்கு அமித்ஷா வருகிறார். மதுரையில் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனை ஆதரித்து மாலை 6 மணிக்கு வாகன பேரணி சென்று வாக்கு சேகரிக்கிறார். இரவு 7.30 மணிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அமித்ஷா தரிசனம் செய்கிறார். அதன்பிறகு இரவில் மதுரையில் உள்ள நட்சத்திர விடுதியில் அமித்ஷா தங்குகிறார்.
அதன்பிறகு நாளை மறுநாள் அமித்ஷாவின் 2 நாள் பிரசாரம் தொடங்குகிறது. நாளை மறுநாள் காலையில் மதுரையில் இருந்த புறப்படும் அமித்ஷா காலை 9.15 மணிக்கு திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சென்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு திருவனந்தபுரம் சென்று விமானத்தில் திருச்சி வந்து ஓட்டலில் மதிய உணவு முடித்து ஓய்வு எடுக்கிறார்.
இதையடுத்து மதியம் 3 மணிக்கு நாகை பாஜக வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசுகிறார். அதன்பிறகு மாலை 6.30 மணிக்கு தென்காசி லோக்சபா தொகுதியில் பிரசாரம் செய்கிறார். இந்த தொகுதியில் பாஜக கூட்டணியில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் போட்டியிடும் நிலையில் அமித்ஷா பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷா தமிழகம் வருகை ஏற்கனவே இரண்டு முறை ரத்து செய்யப்பட்டு இப்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu