திருநெல்வேலி, கன்னியாகுமரி தொகுதிகளில் 4ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணி முதல் நடந்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியை பொறுத்தவரை மொத்தம் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளில் பகல் 12 மணி நிலவரப்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
அதிமுக, பாஜக தலா ஒரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பல தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடிப்பது அதிமுக வா, பாஜகவா என்கிற போட்டி தான் இந்த இரு கட்சிகளுக்கு இடையே நடந்து வருகிறது முழுமையாக தேர்தல் முடிவு வர மாலை 6 மணிக்கு மேல் ஆகிவிடும் என்றாலும் தற்போதைய முன்னிலை நிலவரப்படி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தான் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். எனவே திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 38 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. விருதுநகர் தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக வேட்பாளரான விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் முன்னிலையில் உள்ளார். பாஜக கூட்டணியில் பாமக தர்மபுரி தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அதே நேரத்தில் கோவை உள்பட பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .அதையும் தாண்டி திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் பாஜக வேட்பாளரும், மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரும், நான்காவது இடத்தில் அதிமுக வேட்பாளரும் உள்ளனர்.
அதேபோல கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முதல் இடத்திலும், பாஜக வேட்பாளர் இரண்டாவது இடத்திலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மூன்றாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் நான்காவது இடத்திலும் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு கட்சி தொண்டர்கள் மத்தியில் கட்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu