பரபரப்பான சூழலில் ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பரபரப்பான சூழலில் ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
X

அ.தி.மு.க. தலைமை அலுவலகம் (கோப்பு படம்).

பரபரப்பான அரசியல் சூழலில் ஜூலை 5ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள் கூட்டம் வருகிற ஐந்தாம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க. தலைமை கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி நிலவரம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம், கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்ப்பது மற்றும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அமலாக்க துறை வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, தமிழக முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே செந்தில் பாஜாஜி விவகாரம் தொடர்பாக நடந்து வரும் சட்டப்போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

இது தவிர கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரி செய்து துரிதப்படுத்துதல், செயல்படாத மாவட்ட செயலாளர்களுக்கு பதில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவது பற்றியும், நாட்டில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள பொது சிவில் சட்டம் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என அ.தி.மு.க. கட்சி வட்டாரத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story