அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டது: ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டது:  ஜெயக்குமார் திடீர் அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் தேர்தலில் அ,தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி இருந்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. 65 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவினாலும் பா.ஜ.க. அ.தி.மு.க. கூட்டணி இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மேலிடமும் அறிவிக்கவில்லை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடமும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அதிரடி பேச்சால் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே அடிக்கடி, முட்டல் ,மோதல் உரசல் ஏற்படுவது உண்டு.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன் பின்னர் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தலையிட்டு அண்ணாமலைையை அடக்கி வாசிக்கும்படி கூறினார்கள். இதன் காரணமாக இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதப்பட்டது.

ஆனால் அது முற்றுப்புள்ளி அல்ல, கமா தான் என கருதும் வகையில் அண்ணாமலை மீண்டும் வாய் திறந்து உள்ளார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் அண்ணா பற்றி அண்ணாமலை பேசிய பேச்சு மீண்டும் அ.தி.மு.க- பா.ஜ.க. கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் அண்ணாமலை குறிப்பிட்டதை அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ளன.

இந்த நிலையில் அண்ணாமலையை கண்டித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் ஜெயக்குமார் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் சென்னையில் இன்று அண்ணாமலை பற்றி ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அவரது பேட்டி இதோ

அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது பா.ஜ.க. இல்லை. பாஜக -அதிமுக கூட்டணி முறிந்து விட்டது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழே தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அண்ணாமலை தனது பேச்சை நிறுத்தாவிட்டால் இனி தாறுமாறாக விமர்சிப்போம்.

அரசியலுக்கு தகுதியே இல்லாதவர் அண்ணாமலை. பாஜக தலைவர் பதவிக்கும் தகுதியே இல்லாதவர் அவர். பா.ஜ.க.வுக்கு காலே இல்லை. பின் எப்படி அவர்கள் காலூன்ற முடியும். சிங்க கூட்டத்தை பார்த்து சிறு நரி ஊளையிடுகிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்க பா.ஜ.க. தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை. அண்ணாமலை ஒரு கோழை. 2024 தேர்தலில் பா.ஜ.க.வால் ஒன்றும் கிழிக்க முடியாது. பா.ஜ.க. எங்களுக்கு வேஸ்ட் லக்கேஜ். அண்ணாமலையால் தனியாக நின்று ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற இயலுமா?

இவ்வாறு ஜெயக்குமார் கடுமையாக சாடி உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது என்பது பற்றி அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது பற்றிய விவரங்களை இரு கட்சி தலைமையும் இதுவரை வெளியிடவில்லை. எடப்பாடி பழனிசாமியும் வாய் திறக்கவில்லை. இந்த நிலையில் திடீரென அண்ணாமலை பேச்சுக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் போல் பேசி வருபவருமான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.க.- பாஜக கூட்டணி முறிந்து விட்டதாக அறிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் மைண்ட் வாய்ஸ் என கருதப்படும் ஜெயக்குமாரின் குரல் பாஜகவிற்கு எதிராக இப்படி அதிரடியாக ஒலித்து இருப்பதால் எடப்பாடி பழனிசாமி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை கழற்றிவிடும் முடிவுக்கு வந்து விட்டாரா என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்து உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story