கோவையில் 31- ந்தேதி பா.ஜ.க.நடத்த திட்டமிட்டு இருந்த முழுஅடைப்பு ஒத்திவைப்பு
பா.ஜ.க. போராட்டம் ஒத்திவைப்பு. கோப்பு படம்.
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த 23-ந்தேதி ஒரு கார் திடீர் என்று வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (வயது 29) என்பவர் உடல் கருகி இறந்தார்.கார் வெடித்த இடத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர், ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வெடி பொருட்களை கைப்பற்றினார்கள்.இந்த சம்பவத்தில் ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6பேர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கு விசாரணையை மத்திய அரசின் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.
இந்த கார் வெடித்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பாக தமிழ அரசு மீது பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார்.கோவையில் ஒரு பெரிய சதி திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று 18ந்தேதியே மத்திய அரசு தமிழக அரசை எச்சரித்து இருந்தது. ஆனால் தமிழக போலீஸ் அதிகாரிகள் அதை கண்டுகொள்ளாமல் அஜாக்கிரதையாக இருந்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பல ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அண்ணாமலை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்தும்,கோவையை காப்போம் என்றும் கூறி கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 31ந் தேதி கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்து.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கோவை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதோடு இந்த முழு அடைப்பு போராட்டம் தேவையற்றது, இது மக்களை பாதிக்கும் அதனால் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் முழு அடைப்பு நடத்தப்பட்டால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.
இந்த நிலையில்,கோவையில் 31ந்தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க.தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.ஆனால் அக்.31ல் கோவை செல்வதாக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "கோவையில் நடத்த இருந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் கோட்டை ஈஸ்வரன் அருளால் தவிர்க்கப்பட்டது. கோவை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் அக்டோபர் 31ம் தேதி நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். முழு அடைப்பு கைவிடப்பட்டு அன்றைய தினம் கோவைக்கு அண்ணாமலை வருவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் கட்சியினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu