நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி: தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய குழு

நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி: தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய குழு

நடிகர் விஜய்.

நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கான குழு டெல்லிக்கு சென்று உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக விஜய் தொடங்கும் அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க, பாஜக படுதீவிரமாக களமிறங்கி உள்ளன. தி.மு.க. அணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டன. அ.தி.மு.க.வும் பல்வேறு தேர்தல் குழுக்களை அறிவித்து பணிகளை தொடங்கி இருக்கிறது.

பா.ஜ.க.வுக்காக மத்திய அமைச்சர்கள் பலரும் பல்வேறு திட்டங்கள் ஆய்வு, தொடக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து வருகை தந்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எந்த கூட்டணியில் சேரும் என்கிற கேள்வியும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. மறைந்த விஜயகாந்தின் தேமுதிக, பாஜக கூட்டணிக்கே போகக் கூடும் எனவும் கூறப்படுகிறது. வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்தே தேர்தலை எதிர்கொள்கிறது.

இத்தனை அரசியல் களேபரங்களுக்கு மத்தியில் நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சியும் லோக்சபா தேர்தல் களத்தில் குதிக்க உள்ளதாம். சென்னையில் நேற்று விஜய் நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டனவாம். இதனடிப்படையில் தாம் தொடங்க இருக்கும் கட்சியின் தலைவராக தாமே இருப்பதாகவும் உடனடியாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் நிர்வாகிகளிடம் தெரிவித்தாராம் விஜய். இதனையடுத்தே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் குழு ஒன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்து, கட்சியின் அனைத்து நிர்வாகிகளையும் நியமனமும் செய்து முடிக்க ஒரு மாதம் மட்டுமே அவகாசம் எடுத்து கொள்ளப்படுகிறதாம். இதனையடுத்து பிப்ரவரி மாதம் இறுதியில் விஜய் தமது கட்சி பெயர், கொடி, நிர்வாகிகள் உள்ளிட்ட விவரங்களை முழுமையாக அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் தொடங்கும் அரசியல் கட்சி யாருடன் கூட்டணி என்பதும் அப்போது தெரியவரும் என்கின்றனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.

Tags

Next Story