வரலாற்றை மறைக்கலாமா? ரஜினிக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கேள்வி
நடிகர் ரஜினிகாந்த்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ் திரை உலகம் சார்பில் ‘கலைஞர் 100’ சினிமா நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரை உலகின் நடிகர் நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், கருணாநிதியால் தான் எம்.ஜி.ஆர் .உயர்வு பெற்றார் என கூறியிருந்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் நேற்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் கூறியதாவது:-
அண்ணா மறைந்த போது தி.மு.க.வில் அடுத்த முதல்வர் யார் என்ற பிரச்சினை வந்தது. அப்போது நெடுஞ்செழியனையே முதல்வராக்க வேண்டும் என பலரும் கருத்து முன்வைத்தனர். ஆனால் எம்.ஜி.ஆர்.தான், முரசொலி மாறன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து கருணாநிதியை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வராக்கினார். எங்கள் தங்கம் திரைப்பட விழாவிலேயே கருணாநிதி இதை வெளிப்படையாகவே பேசினார். இந்த வரலாற்றை மறைத்துவிட்டு ரஜினி காந்த் பேசக் கூடாது. கருணாநிதி முதல்வர் பதவியில் அமர காரணமே எம்.ஜி.ஆர். மட்டுமே முழுமையான காரணம். இதுதான் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.
கருணாநிதியால் தான் எம்.ஜி.ஆர். உயர்ந்தார் என ரஜினிகாந்த் பேசியிருப்பதை தமிழ்நாடு ஏற்குமா ? எம்.ஜி.ஆர். ரசிகர்கள்தான் ஏற்பார்களா? தி.மு.க.வில் எம்.ஜி.ஆர். இருந்தவரை.தான் கருணாநிதி பதவியில் இருந்தார். எம்.ஜி.ஆர். திமுகவை விட்டு வெளியேறியதால் கருணாநிதி அமைச்சராகவும் முடியவில்லை. முதல்வராகவும் முடியவில்லை. கருணாநிதியை 11 ஆண்டுகள் வனவாசம் அனுப்பியவர் எம்.ஜி.ஆர் என்பதுதான் வரலாறு. கருணாநிதியை புகழ்வதற்காக வரலாற்றை தவறாக மறைத்து ரஜினிகாந்த் பேசியது வருத்தம் தருகிறது. ரஜினிகாந்த் இப்படி பேசியிருக்கக் கூடாது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் தெரிவித்தனர்.
மேலும், கருணாநிதி நூற்றாண்டு விழாவுக்கு 50,000 இருக்கைகள் போட்டிருந்தனர். ஆனால் வெறும் 899 பேர்தான் விழாவுக்கே வந்திருந்தனர். இதனைவிட கருணாநிதியை வேறுவகையில் அவமதிக்க முடியுமா? ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் எழுதிக் கொடுத்த உரையை வாசித்துவிட்டு வந்துவிட்டனர் எனவும் குறிப்பிட்டார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu