பா.ஜ.விற்கு வாய்ஸ் கொடுத்த நடிகர் சிரஞ்சீவி...இது தான் ஆந்திர அரசியல்
![பா.ஜ.விற்கு வாய்ஸ் கொடுத்த நடிகர் சிரஞ்சீவி...இது தான் ஆந்திர அரசியல் பா.ஜ.விற்கு வாய்ஸ் கொடுத்த நடிகர் சிரஞ்சீவி...இது தான் ஆந்திர அரசியல்](https://www.nativenews.in/h-upload/2024/04/23/1894391-siram.webp)
நடிகர் சிரஞ்சீவி.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் நடிகர் சிரஞ்சீவி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பவன் கல்யாணின் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். சிரஞ்சீவியின் இந்த முடிவு என்பது அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு எல்லாம் வழங்கி அழகு பார்த்த காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். இந்நிலையில் மே 13ம் தேதி ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஆகியவை ஒன்றாக நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. அதேபோல் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது ஆந்திராவில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவி பாஜக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர்களை கட்டாயம் வெற்றி பெற வைக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதன்படி பெண்டூர்தி சட்டசபை தொகுதியில் போட்டியிடடும் ஜனசேனா கட்சியின் வேட்பாளர் பஞ்சகர்லா ரமேஷ் பாபு மற்றும் அன்னகாபள்ளி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரமேஷ் ஆகியோரை மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிரஞ்சீவி வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛நான் அரசியல் பேசி அதிக ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது எனது தம்பியும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்காக அரசியல் பேசுகிறேன். அதேபோல் எனது நண்பர்களான ரமேஷ் (அன்னகாபள்ளி லோக்சபா தொகுதி வேட்பாளர்) மற்றும் பஞ்சகர்லா ரமேஷ் பாபு (பெண்டூர்தி சட்டசபை தொகுதி ஜனசேனா வேட்பாளர்) ஆகியோருக்காக இந்த வீடியோவை வெளியாகி உள்ளது.
பஞ்சகர்லா ரமேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் திறமையான தலைவர்கள். இருவரும் மக்களின் வளர்ச்சிக்காக குரல் கொடுக்க கூடியவர்கள். இதில் ரமேஷ் மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பவர். அதேபோல் பஞ்சரகர்லா ரமேஷ் நன்கு உழைக்க கூடியவர். இவர்களுக்கு கட்டாயம் ஓட்டளிக்க வேண்டுகிறேன். மேலும் ஆந்திர மாநிலம் இன்னும் நன்கு வளர்ச்சியடைய வேண்டும் என்பதை விரும்புகிறேன். இதனால் பொதுமக்கள் நல்ல தலைவர்களை ஓட்டுப்போட்டு தேர்வு செய்ய வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி 2008 ஆகஸ்ட் மாதம் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2009ல் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்டது. இதில் 17 சட்டசபை தொகுதிகளில் அவரது கட்சி வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன்பிறகு கடந்த 2011ல் சிரஞ்சீவி தனத கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
அதன்பிறகு சிரஞ்சீவி ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டதோடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக 2012ல் நியமனம் செய்யப்பட்டார். அதன்பிறகு 2014ல் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. அதன்பிறகும் 2018 வரை ராஜ்யசபா எம்பியாக தொடர்ந்த சிரஞ்சீவி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. தற்போது அவர் காங்கிரஸ் கட்சிக்காக எந்த பிரசாரமும் செய்யவில்லை.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் ஜனசேனா கட்சியின் வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி அவரை மத்திய அமைச்சராக்கிய நிலையில் அவரது செயல்பாடு என்பது நன்றி மறந்துவிட்டாரா? என்ற கேள்வியையும் எழுப்பி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu