ரூ.7000 கோடி நிதி நிறுத்தி வைக்கப்பட்டதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு
பிரதமர் மோடி.
மேற்கு வங்கத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கப்படவில்லை என்பதற்காக, அம்மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.7000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
சமீப காலங்களாக மாநில அரசிற்கான நிதி ஆதாரத்தை, மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் இந்த விமர்சனங்கள் அதிகரித்திருக்கின்றன. சில நாட்களுக்கு முன்னர் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு வைத்துள்ள நிலுவையை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, என்ன காரணத்திற்காக மத்திய அரசு நிதியை விடுவிக்க மறுத்திருக்கிறது என்பதையும் அவர் விளக்கியிருந்தார்.
அதாவது, கேரளாவில் தேசிய சுகாதார இயக்கம் திட்டத்தின் கீழ் இயங்கும் 'குடும்ப ஆரோக்கிய கேந்த்ரம்' மருத்துவ மையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படாமல் இருக்கிறது. இந்த மருத்துவ மையங்கள் அனைத்தும் 60 சதவிகிதம் மத்திய அரசு நிதி, 40 சதவிகிதம் மாநில அரசு நிதி என்று இயங்கி வருகிறது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு இதற்கான நிதியை வழங்கவில்லை. எனவே மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி பிரச்னை தலை தூக்கியிருக்கிறது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், "இந்த மருத்துவ மையங்களுக்கு கேரள அரசு வழங்கியுள்ள 'குடும்ப ஆரோக்யா கேந்த்ரம்' எனும் பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்' என பெயரிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கேரளாவில் உள்ள கிராமப்புற மக்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அந்நியமான பெயரைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். இது இந்தி மொழியில் இருக்கும் பெயர். எனவே பெயரை மாற்றாததால் நிதியை வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது" என்று விமர்சித்திருந்தார்.
தற்போது இதேபோல, மேற்கு வங்க மாநிலத்திலும் மத்திய அரசு மீது வலுவான குற்றச்சாட்டு ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA) லோகோ மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் மற்றும் ஃபிளக்ஸ்களை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் மேற்கு வங்க மாநில அரசு இதனை கடைபிடிக்க மறுத்துவிட்டது.
எனவே இம்மாநிலத்திலிருந்து நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு பிடித்தம் செய்த தொகையை விடுவிக்க மறுத்திருக்கிறது. அதாவது நெல் அதிகமாக விளையும் மாநிலங்களிலிருந்து அதனை பெற்று, குறைவாக விளையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு சப்ளை செய்யும். இதற்காக மாநில அரசுக்கு குறிப்பிட்ட நிதியை வழங்கும். இப்படியாக மேற்கு வங்கத்திலிருந்து பெறப்பட்ட நெல்லுக்கு ரூ.7000 கொடி கொடுக்க வேண்டும். இந்த நிதியைதான் மத்திய அரசு தற்போது விடுவிக்க மறுத்துள்ளது. இப்படியாக மேற்கு வங்கத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை, மத்திய அரசு நிறுத்தி வைப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கேரளாவுக்கு நடந்ததை போல மேற்கு வங்கத்திலும், பெயரை மாற்ற வேண்டும், நிறத்தை மாற்ற வேண்டும், அப்போதுதான் பணம் தருவேன் என மத்திய அரசு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu