பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரிவேந்தர் போடும் கணக்கு

பெரம்பலூர் நாடாளுமன்ற  தொகுதியில் பாரிவேந்தர் போடும் கணக்கு

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரிவேந்தர் போடும் கணக்கு எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

பெரம்பலூர் மக்களவைத் தேர்தல் களம் கோடை வெயிலை விட அதிகம் சூடு பிடித்துள்ளது. ஏனென்றால், பாரிவேந்தரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பதற்காகப் பிரதமர் மோடி, பெரம்பலூர் வரப் போகிறார் என்று ஒரு தகவலைத் தட்டிவிட்டு விட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்றுவிட்டார்.

அவரது பேச்சைக் கேட்ட மக்கள் தினமும் பாரிவேந்தரைப் பார்க்கும் போது எல்லாம் மோடி எப்போது வருவார்? என்று கேட்கத் தொடங்கிவிட்டனர். சின்ன கிராமத்திற்குள் அவர் பிரச்சாரத்திற்காகச் சென்றால் கூட மோடி வருவாரா என இளைஞர்கள் கூட்டத்தின் நடுவே நின்று குரல் எழுப்பி வருகிறார்கள். அந்தளவில் பாரிவேந்தருக்கு அங்கே ஆதரவு பெருகி வருகின்றது. இப்போது மட்டும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே பாரிவேந்தருக்கு பெரம்பலூர் தொகுதி ஆதரவாகவே இருந்து வருகிறது. பலரும் திமுக செல்வாக்கினால்தான் பாரிவேந்தர் வெற்றி பெற்றார் எனச் சொல்லி வரும் போது, அரசியல் விமர்சகர் கலை, திமுகவே பாரிவேந்தர் செல்வாக்கினால்தான் வெற்றி பெற்றது என்று ஒரு புள்ளி விவரத்தை அள்ளி விட்டுள்ளார்.

பெரம்பலூர் தொகுதிக்குத் தனிப்பட்ட வகையில் பாரிவேந்தர் பல கோடிகளைச் செலவழித்திருக்கிறார். அதைப் பற்றி அவர் விளக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

2019இல் பாரிவேந்தர் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டார். 62.45% வாக்குகளை அந்தத் தேர்தலில் இவர் பெற்றார். 2014இல் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 45.04 % வாக்குகளை வாங்கி இருக்கிறார். அந்தத் தேர்தல்தான் ஜெயலலிதா மோடியா, இந்த லேடியா எனப் பிரச்சாரம் செய்த தேர்தல். அப்போது அதிமுக இந்தளவுக்கு வாக்கு சதவீதத்தைப் பெற்றுள்ளது.

இதே தேர்தலில் திமுக 24.49% வாங்கியது. பாஜக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தர் 23.04% வாக்குகளை வாங்கி உள்ளார். அதாவது 24% இருந்த திமுகவை 2019 தேர்தலில் 62%க்கும் மேலே கொண்டு போய் உட்கார வைத்திருக்கிறார் பாரிவேந்தர். இரண்டாவது இடத்திலிருந்த திமுகவை முதல் இடத்திற்குக் கொண்டு வந்தவர் பாரிவேந்தர். திமுகவை முதல் இடத்திற்குக் கொண்டுவந்தது மட்டுமல்ல; உச்சத்திலிருந்த அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார். இது ஒரு சாதனை இல்லையா? அவருக்கு என்று ஒரு ஆளுமை இல்லை என்றால், இதை எப்படி பாரிவேந்தரால் சாதித்திருக்க முடியும்? இவர் வாங்கி உள்ள 62 சதவீதத்தில், திமுகவுக்கான 24% கழித்து விட்டால், கிட்டத்தட்ட 38% வாக்குகள் இவரது செல்வாக்கினால் கிடைத்தவை. அப்படித்தான் இதைக் கணக்கிட முடியும். முந்தைய புள்ளிவிவரங்களை வைத்துக் கணக்கிட்டால், பாஜகவுக்குப் பெரம்பலூர் தொகுதியில் 23% வாக்குகள் உள்ளன. அதில் இவரது 38% வாக்குகளையும் சேர்த்தால் 61% வாக்குகள் இவருக்கு இந்தத் தேர்தலில் கிடைக்கலாம் என்கிறார்கள் பாரிவேந்தர் ஆதரவாளர்கள். இந்த நிலையில் தான் வருகிற ௧௩ம் தேதி பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார்.

தற்போது பாஜக 2014இல் உள்ள நிலைமையில் இல்லை. அதைவிட வளர்ந்துள்ளது. ஆகவே பாரிவேந்தர் வெற்றி வாய்ப்பும் கூடியிருக்கும் என்பதே அனைவருடைய கணிப்பாக உள்ளது. எனவே இந்தத் தொகுதியில் அமைச்சர் நேருவின் மகனுக்குப் பெரிய அளவில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இல்லை. பாரிவேந்தரை வீழ்த்த வேண்டும் என்பது திமுக திட்டம். அதற்காக அந்தப் பொறுப்பை நேருவிடம் கொடுத்துள்ளார்கள். அவர் தனது மகனைக் களம் இறக்கி இருக்கிறார்.

இதனிடையே பெரம்பலூர் தொகுதியில் உள்ள தாளக்குடி கிராமத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்ட பாரிவேந்தர், அந்த மக்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். பரப்புரையில் பேசிய பாரிவேந்தர், "2024 தேர்தலில் மோடியின் கரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சியை அவர் தந்திருக்கிறார். தாளக்குடி ஊராட்சிக்கு ஒரு சமுதாயக் கூடம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் தொகுதியில் எங்கே எல்லாம் சமுதாயக் கூடம் வேண்டும் என்று கேட்டார்களோ, அத்தனை கூடங்களையும் கட்டிக் கொடுத்திருக்கிறேன். ஆகவே உறுதியாகச் சொல்கிறேன். தாளக்குடிக்குச் சமுதாயக் கூடம் கட்டித்தருவேன். கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைக் கட்ட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார் பாரிவேந்தர்.

Tags

Next Story