திருக்கோவிலூருக்கு ஒரு நீதி, விளவங்கோட்டிற்கு ஒரு நீதியா? அதிமுக கேள்வி

முன்னாள் அமைச்சர் பொன்முடி.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் பதவி பறிபோனதை அடுத்து திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனர்.
விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். உடனடியாக அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த 24 மணிநேரத்தில் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக சட்டசபை தலைவர் அப்பாவு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
தேர்தல் ஆணையமும் உடனடியாக விளவங்கோடு சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. அந்தத் தொகுதிக்கு லோக்சபா தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோல் திருக்கோவிலூர் சட்டசபைத் தொகுதியின் எம்எல்ஏவான பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவரது எம்எல்ஏ பதவி தானாக காலியாகி விட்டது. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டு இரண்டரை மாதங்களாகியும், சட்டசபைத் தலைவர், திருக்கோவிலூர் சட்டசபைத் தொகுதி காலியாக இருப்பதாக இதுவரை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. பொன்முடியின் எம்எல்ஏ பதவி காலியானதால்தான் கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரது இருக்கையை இன்னும் அப்படியே தான் வைத்துள்ளார் பேரவைத் தலைவர்.
லோக்சபா தேர்தலோடு விளவங்கோடு, திருக்கோவிலூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். மாற்று கட்சியினருக்கு ஒரு நீதி, தனது கட்சினருக்கு ஒரு நீதி என்றில்லாமல் அனைவருக்கும் ஒரே நீதி என்பதை நிரூபிக்கும் வகையில் பேரவைத் தலைவர் நடந்து கொள்ள வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய தினம் சட்டசபை செயலர் சீனிவாசனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள், திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu