கேரளா அரசியலில் விஸ்வரூபம் எடுக்கும் சுவப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம்

Swapna Suresh Latest News -கேரளா மாநிலத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் மோசடி வழக்கு ஆளுங்கட்சியினரை ஆட்டி படைத்தது. இந்த வழக்கின் மூலம் பிரபலமானவர் சரிதா நாயர். கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்பட காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் என பலருக்கும் சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்பு இருப்பதாக சரிதா நாயர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார். சோலார் பேனல் தொடர்பான ஆலோசனைக்கு சென்ற போது உம்மன் சாண்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் எனவும் சரிதா நாயர் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த ஊழல் குற்றச்சாட்டை முக்கிய பிரசாரமாக கேரள சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன. தேர்தலில் இந்த குற்றாச்சாட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி காங்கிரசுக்கு தோல்வியை தந்தது.
இதேபோன்று கடந்த முறை பினராயி விஜயன் முதல் மந்திரியாக இருந்த போது 2020 ஆம் ஆண்டு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி வந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளா அரசியலில் பெரும் சூறாவளியை உருவாக்கியது இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் சுவப்னா சுரேஷ். கேரளா தலைமைச் செயலகத்தில் ஐ.டி. துறையின் ஸ்பேஸ் பார்க்கில் அதிகாரியாக தற்காலிக பணியில் சுவப்னா சுரேஷ் இருந்தார். முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமாக இருந்த கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் என்பவருடன் சுவப்னா சுரேஷ் நெருக்கமாக பழகி வந்தார். இந்த பழக்கத்தை சுவப்னா சுரேஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விளக்கில் சுவப்னா சுரேஷ் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு இரண்டு பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
சிறையில் இருந்து 98நாட்களுக்கு பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இதே போல் ஒன்றேகால் ஆண்டுகள் சிறையில் இருந்த சுவப்னா சுரேஷ் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இவர்கள் மீதான வழக்கு கோர்ட்டில் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த உடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் சுயசரிதை புத்தகம் எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில், " தங்கம் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. சுவப்னா சுரேஷ் கல்வித்தகுதியை பார்க்காமல் ஸ்பேஸ் பார்க்கில் அவரை வேலைக்கு சேர்த்து தான் தவறு. அதற்காக என்னை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார்கள். சுவப்னா சுரேஷ் தான் பெரிய சதி செய்து என்னை மாட்டி விட்டார். அவர் கடத்தலில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவில்லை'' என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை அந்த சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருந்தார்.
இந்த நிலையில் சிவசங்கரனுக்கு பதிலடி கொடுக்கும்வகையில் சுவப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். தற்போது இந்த சுயசரிதை புத்தகம் தான் கேரளா அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுவப்னாசுரேஷ் ஆட்சியாளர்கள் மீது பல்வேறு புதிய குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதனால் சுவப்னா சுரேஷ் கருத்து கேரளா அரசியலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சுவப்னா சுரேஷ் எழுதி உள்ள 'சதியுடே பத்ம வியூகம்' என்ற அந்த புத்தகம் 12.10.2022 அன்று வெளியாக உள்ளது. அந்த புத்தகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக சுவப்னா சுரேஷ் எழுதியுள்ள சில தகவல்கள் முன்னோட்டமாக வெளியாகி உள்ளன. சுவப்னாசுரேஷ் அந்த புத்தகத்தில், "முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் என்னிடம் மிகவும் நெருக்கமாக இருந்தார். சென்னைக்கு அழைத்து வந்து அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து எனக்கு தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். அப்போது 'உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்' என்று உறுதியாக சொன்னார். நான் கைது செய்யப்பட்ட போதும், என்.ஐ.ஏ விசாரணையின் போதும் என் கழுத்தில் சிவசங்கரன் கட்டிய மஞ்சள் தாலி இருந்தது என்று சுவப்னா சுரேஷ் எழுதி உள்ளார்.
மேலும் கேரளா முன்னாள் மந்திரி ஒருவர் எனக்கு பலமுறை செக்ஸ் தொல்லை கொடுத்தார். அவர் தன்னை ஓட்டலுக்கு அழைத்து சென்போனில் அனுப்பிய வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் பல இப்போதும் என்னிடம் உள்ளன. ஏற்கனவே இந்த தகவலை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்து உள்ளேன். பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கில் இருந்து உங்களை காப்பாற்றுவோம் என்று கூறினார்கள். அனால் தான் , அரசுக்கோ, முதல்வருக்கோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை' என சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன்" என்பது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த சுயசரிதை புத்தகத்தில் சுவப்னா சுரேஷ் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் , கேரள முன்னாள் மந்திரி ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நட்டோ உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுவப்னா சுரேஷ் அந்த புத்தகத்தில் கூறியிருப்பதாகவும் தெரிகிறது. சுவப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம் மீண்டும் கேரள அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும், தங்கம் கடத்தல் வழக்கு சூடுபிடிக்கும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu