சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு உடையவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாம்பரம் போலீசார் இன்று சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி லோக்சபா தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்த சூழலில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 பேர் சிக்கினர்.
பிடிபட்டவர்கள் பாஜக எம்.எல்.ஏ-வும், நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக புரசைவாக்கத்தில் உள்ள ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக அவர்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக கூறப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் ஆய்வாளர் பால முரளியிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் இன்று சிபிசிஐடியிடம் ஒப்படைத்து உள்ளனர். சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் முன்னிலையில் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி காவல் ஆய்வாளர் லோகநாதனிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தாம்பரம் போலீசார் இதுவரை 15 பேரிடம் விசாரணை நடத்தி, 350 பக்க விசாரணை அறிக்கையை தயார் செய்துள்ளனர்.
அந்த 350 பக்க விசாரணை அறிக்கையை தாம்பரம் போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டவர்களின் 4 செல்போன்களும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தொடர்புடைய இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்வதற்காக வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி விசாரணை தொடர்ங்கியுள்ள நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்படாலம் எனக் கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu