சென்னையில் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.
சென்னை கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் திருக்கோயில்கள் சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை ஏற்று நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட பட்டியலினத்தவர். பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் அர்ச்சகராகி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது.
கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ‘ஆகிவிடக் கூடாது’ என்று பராசக்தி திரைப்படத்தில் அன்றைக்கு தலைவர் கலைஞர் வசனம் எழுதினார். திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள். வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவினை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும். பழமையான ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான மூலிகை வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து. இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களின் எண்ணிக்கையை 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.ஏழை இணையர்களுக்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு. 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம். திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலமாக கோயில்கள் சீரமைகின்றன. பக்தர்கள் மனநிறைவை அடைகிறார்கள். மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்தத் துறைக்கு இந்து சமயத் துறை என்று பெயரல்ல, இந்து சமயஅறநிலையத் துறை என்று பெயர் அதனால்தான் அறம் சார்ந்த தொண்டுகள் செய்யப்படுகின்றன. நம்முடைய மணமக்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புவது,
உங்களுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள். தமிழ் உணர்வை அந்தக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu