ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் மீது 242 கிரிமினல் வழக்குகள்
பாஜகவின் சுரேந்திரன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவில், கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் அதாவது வரும் ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பாஜக கேரள மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். இதனால், இந்த தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்ட சுரேந்திரன், 2009 முதல் மூன்று மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.
நான்குமுறை சட்டமன்றத் தேர்தல்களிலும் களமிறங்கியுள்ளார். 2021ல் ஒரே நேரத்தில் கொன்னி மற்றும் மஞ்சேஷ்வர் தொகுதிகளில் போட்டியிட்டார். 2016ல் சுரேந்திரன் மஞ்சேஷ்வர் தொகுதியில் வெறும் 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் தோல்வியையே சந்தித்தார்
இந்நிலையில் தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள வழக்குகளின் விவரங்களை விளம்பரப்படுத்துவது கட்டாயம். அந்த வகையில் சுரேந்திரன் மீதான வழக்குகள் தொடர்பான விளம்பரம் ஒன்று, அண்மையில் கட்சி சார்பிலான செய்தித்தாளில் 3 பக்கத்திற்கு இடம்பெற்றுள்ளது.
அதன்படி, வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் சுரேந்திரன் மீது 242 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில், 237 வழக்குகள் சபரிமலை போராட்டங்கள் தொடர்பானவை எனவும், 5 போராட்டங்கள் கேரளாவில் பாஜக முன்னெடுத்த பல்வேறு போராட்டங்கள் தொடர்பானவை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, எர்ணாகுளம் தொகுதி பாஜக வேட்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மீது சுமார் 211 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுரேந்திரன் மீதான குற்றவழக்குகள் தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாரத்தின் சில பகுதிகளில் தேசியவாதியாக இருப்பது கடினம். இது அன்றாடப் போராட்டம். ஆனால் அது போராட்டத்திற்கு மதிப்புள்ளது என குறிப்பிட்டு சுரேந்திரன் மீதான வழக்குகள் தொடர்பான விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், பெண்கள் நுழைவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் கேரள அரசின் முடிவுக்கு எதிராக பாஜக மற்றும் அதைச் சார்ந்த கட்சிகள் 2018ல் மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுத்தன. அந்த போராட்டங்கள் தொடர்பான பெரும்பாலான வழக்குகளில், பாஜக தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu